புதுடில்லி : புதிய மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில், புதுடில்லிமுன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை, வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடில்லியில், 2021 – 22ம் ஆண்டில் புதிய மதுபானக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. இதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது. விவகாரம்பெரிதானதை அடுத்து புதிய மதுபானக் கொள்கை திரும்ப பெறப்பட்டது.
இந்த ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். விசாரணைக்காக அளிக்கப்பட்ட கால அவகாசம் நேற்று முடிவடைந்ததை அடுத்து, சிசோடியா நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை, தேவைப்பட்டால் மனு அளிப்பதாக சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிசோடியாவை வரும் 20ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார். சிசோடியா, தன்னுடன் பகவத் கீதை புத்தகம், மூக்குகண்ணாடி, மருந்துகள் எடுத்து செல்லநீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், சிசோடியா தினமும் தியானம் செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கும்படி சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து புதுடில்லி திஹார் சிறையில் உள்ள சிறை எண் 1ல் மணிஷ் சிசோடியா அடைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement