Doctor Vikatan: பயணம் செய்யும்போது கால்களைத் தொங்கவிட்டபடிச் செல்வதால் கால்கள் வீங்கிக் கொள்கின்றன. அந்த வீக்கமானது சிறிது நேரத்தில் வடிந்துவிடுகிறது. இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்து கொள்வது? இது சிறுநீக நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். இதற்கு சிகிச்சை அவசியமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

கார், பஸ், ஃபிளைட் போன்றவற்றில் கால்களைத் தொங்கவிட்டபடி பயணம் செய்யும்போது பலருக்கும் இதுபோன்று பாதங்களில் வீக்கம் வருவதுண்டு. இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம் ‘வேரிகோஸ் வெயின்ஸ்’ எனப்படும் பாதிப்பு.
கால்களில் வீக்கம் என்றால் மருத்துவர், அதற்கான எல்லா ரிஸ்க் குறித்தும் யோசிப்பார். அதாவது இதயம், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், தைராய்டு, ரத்தச்சோகை என எது வேண்டுமானாலும் கால் வீக்கத்துக்கு காரணமாக இருக்கலாம். இந்தக் காரணங்களால் வரும் கால் வீக்கம் என்றால் கூடவே வேறு அறிகுறிகளையும் காட்டும்.
வேரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பால் பயணத்தின்போது மட்டும் ஏற்படும் கால் வீக்கம் குறித்துப் பெரிதாக பயப்படத் தேவையில்லை. ஆனாலும் இந்தப் பிரச்னையால் சிலருக்கு லேசான வலியும், சரும நிற மாற்றமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வேரிகோஸ் வெயின்ஸ் என்பதில், கால்களில் உள்ள நரம்புகளைச் சுற்றிய தசை சுவரானது தன் மீள் தன்மையை (எலாஸ்டிக் தன்மையை) இழப்பதால் பலவீனமடையும்.
கால்களிலிருந்து இதயத்துக்குப் போகும் ரத்தமானது புவிஈர்ப்பு விசையின் காரணமாக, மீண்டும் பின்னோக்கி வராமலிருக்க, வேரிகோஸ் வெயின்ஸ் வால்வுகள் இருக்கும். அந்த வால்வுகள் சிலருக்கு பரம்பரைத் தன்மை, நீண்ட நேரம் நிற்பது போன்ற காரணங்களால் பலமிழந்திருப்பதால், சரியாக வேலை செய்யாது. இதனால்தான் பயணங்களின்போது கால்களைத் தொங்கவிட்டபடிச் செல்லும்போது ரத்தம் தேங்கி, திசுக்களுக்குள் சில திரவங்கள் கசிந்து கால்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

உங்களுக்கு அடிக்கடி இப்படி ஏற்படுகிறது என்றால் மருத்துவரை அணுகி இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் பிரச்னைகள் இருக்கின்றனவா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். அப்படி இல்லாதபட்சத்தில் வேரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பால் தான் கால் வீக்கம் ஏற்படுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
பயணம் செய்துவிட்டு வந்ததும், கால்களை சிறிய ஸ்டூலின் மேல் உயர்த்தி வைத்துக்கொள்ளலாம். மருந்துக் கடைகளில் கம்ப்ரெஷன் ஸ்டாக்கிங்ஸ் என்று கிடைக்கும். அதை ரெகுலாகவோ அல்லது பயணத்தின்போதோ பயன்படுத்தலாம். இது சாக்ஸ் போன்று இருக்கும். ஆனால் கொஞ்சம் டைட்டாக இருக்கும். இதை அணிவதன் மூலம் ரத்தம் பின்னோக்கிச் செல்வது தடுக்கப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.