பெங்களூரு: ”மின் துறையில் நஷ்டத்தை தடுத்து நிதி நிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
‘பெஸ்காம்’ சார்பில் பெங்களூரு எச்.எஸ்.ஆர்.லே – அவுட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், எட்டு மாவட்டங்களில் மின் துறைக்கான அலுவலகங்களை முதல்வர் பசவராஜ் பொம்மை ‘ரிமோட்’ மூலம் திறந்து வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
மின் துறைக்கு வழங்கிய மானியம், போக்குவரத்து துறையில் வருவாய் இழப்பால் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இரு துறைகளின் பொருளாதாரம் மேம்படும் வகையில், தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்கமிட்டி வழங்கும் சிபாரிசுகளை அரசு அமல்படுத்தும்.
மின் வினியோக நிறுவனங்களுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கியும் கடனில் உள்ளன. பராமரித்தல், மின் உற்பத்தி, சேமிப்பு, அதிகப்படியான மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம் கடந்த ஆண்டு கோடையில் 2,500 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. ஆனாலும், நிதி நிலை மேம்படவில்லை.
விவசாயிகள், வணிகர்கள், தெருவோர வியாபாரிகள் என அனைத்து வகை மின் நுகர்வோருக்கும் போதிய சேவை வழங்கப்படுகிறது.
கோடை சீசனில் அதிக அளவில் டிரான்ஸ்பார்மர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி செய்து, உள்ளூர் நிலக்கரியுடன் கலக்கியதால் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த மாதிரி நஷ்டம் வரக்கூடாது. மின் இழப்பை குறைக்க வேண்டும்.
இழப்பை அறிவியல் பூர்வமாக கணக்கிட வேண்டும். இதில் முன்னேற்றம் காண வேண்டும்.
சோலார் பம்ப் செட் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மின் வினியோக ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
சூரிய மின் உற்பத்தியில் கர்நாடகா முன்னணியில் இருக்கிறது. கர்நாடகா வளர்ந்து வரும் மாநிலம், எரிபொருளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே தேவையை பூர்த்தி செய்ய முடியும். மின் துறையில் நஷ்டத்தை தடுத்து, நிதி நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்