வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்னையில் ‘அரசியல்’ செய்கிறாரா அண்ணாமலை?!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பரவிய தகவல்களாலும், வீடியோக்களாலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை பீகார் சட்டமன்றத்தில் பெரும் பிரச்னையாக பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கிளப்பினர். ஆனால், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல் போலியானது என்பது என்பது உறுதிசெய்யப்பட்டது. சமூகவலைதளங்களில் வெளியான இரண்டு வீடியோக்களும் போலியானவை என்பதும் உறுதிசெய்யப்பட்டது.

தேஜஸ்வி யாதவ் – சைலேந்திர பாபு

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான தகவல் பரப்பப்படுவதாக தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்தார். அந்த போலி வீடியோவை வெளியிட்டது பீகார் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர் என்பது கண்டறியப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்த தமிழ்நாடு காவல்துறை, அவரை கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்று பீகார் சட்டமன்றத்தில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரத்தில் உண்மை நிலையை நேரில் அறிவதற்காக பீகார் மாநில அரசு அதிகாரிகள் குழு ஒன்று தமிழ்நாடு வந்திருக்கிறது. அந்தக் குழுவினர், திருப்பூர் சென்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளையும் அங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளையும் சந்தித்தனர். பின்னர், தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று பீகார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிராக் பாஸ்வான்

இந்த விவகாரத்தையொட்டி, தமிழ்நாடு வந்திருக்கும் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான், ‘பீகாருக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்ல நட்புறவு இருக்கிறது. சமூகவலைதளங்களில் பரவும் வீடியாவை யாரும் நம்ப வேண்டாம். போலி செய்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில் அனலாகத் தகிக்கிறது. வடஇந்தியத் தொழிலாளர் விவகாரத்தில் வதந்தியைப் பரப்பி, வன்முறையைத் தூண்டியதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது சென்னை போலீஸார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ‘முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்’ என்று தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை சவால்விட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “‘இந்தி தெரியாது போடா’ என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முதல்வர் மகன் டீஷர்ட் கலாசாரத்தைத் தொடங்கி வைத்தார். ‘விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள்’ என்று முதல்வரின் தங்கையான தி.மு.க எம்.பி ஒரு பொய்யான புகாரை வழங்கி, வட மாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் தொடங்கி வைத்தார்.

அண்ணாமலை

தற்போது உலாவும் பல பொய்யான செய்திகளுக்கு இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி, வன்மம் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பிவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான், ‘வட மாநிலத்தவர் மீதான வெறுப்புப் பிரசாரங்களுக்கு முடிவுகட்டுவாரா முதல்வர்?’ என்று கேட்டிருந்தேன். அதனால்தான், பிரச்னையைத் திசைதிருப்ப, என்மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர்” என்று கூறியிருந்தார்.

அண்ணாமலையை விமர்சித்து தி.மு.க-வின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழ்நாட்டின் முதலமைச்சருடைய சிறந்த நிர்வாகத்திற்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கலாம் என்பதே அவர்களின் வஞ்சகத் திட்டம்.
பா.ஜ.க பரப்பியதெல்லாம் வதந்திதான் என்பது தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடமும் அம்பலமாகிவிட்டது. அதனால், அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை அலறல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்” என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார்.

சிவ ஜெயராஜ்

இந்த விவகாரம் குறித்து தி.மு.க செய்தித்தொடர்பு இணைச்செயலாளரும் வழக்கறிஞருமான சிவஜெயராஜிடம் பேசினோம். “தமிழ்நாடு முதல்வரின் பிறந்த நாள் விழாவுக்காக, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மார்ச் 1-ம் தேதி சென்னை வந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தேஜஸ்வி, 2024 தேர்தலில் யாரை வீழ்த்த வேண்டும் என்று தெளிவாகவும் உறுதியாகவும் பேசினார். அவர் சென்னையிலிருந்து கிளம்பி பீகாரில் இறங்கி 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, திட்டமிட்ட ஒரு பொய் தகவலை பீகார் மாநில பா.ஜ.க கிளப்பியது. போலி வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டார்கள். பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ பக்கத்திலேயே அவற்றை வெளியிட்டார்கள். அவை போலி வீடியோ என்று உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

சமூகத்தில் அமைதியின்மையை உண்டாக்கக்கூடிய அத்தகைய வீடியோவை வெளியிட்டவர்களை அண்ணாமலை கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அதை வைத்து அவர் அரசியல் செய்கிறார். தன் மீது வழக்குப் பதிவு செய்தவுடன், முடிந்தால் கைது செய்யுங்கள் என்று கூறுகிறார். இவ்வளவு சென்டீவ் ஆன ஒரு பிரச்னையை எப்படி கையாள வேண்டும் என்பது ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்குத் தெரியாதா? ஆனால், வேண்டுமென்றே, திட்டமிட்டு இதில் அவர் அரசியல் செய்கிறார். தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாக அண்ணாமலை நடந்துகொள்கிறார்” என்கிறார் சிவ ஜெயராஜ்.

இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் எஸ்.எஸ்.ஸ்ரீராமிடம் பேசினோம். “இந்தப் பிரச்னையில் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று கூறுவது தவறு. நிச்சயமாக, அவர் அரசியல் செய்யவில்லை. தி.மு.க-வினர்தான் நீண்டகாலமா இந்தி எதிர்ப்பு அரசியலை செய்துகொண்டிருக்கிறார்கள். வங்கி, ரயில்வே, தபால்துறை என எல்லா இடங்களிலும் வடஇந்தியர்கள் வேலைக்கு வந்துவிட்டதாக அவர்கள்தான் பிரசாரம் செய்கிறார்கள்.

ஸ்ரீராம்

தற்போது, அவர்களுக்கே இக்கட்டமான ஒரு சூழல் வரும்போது, வேறு மாதிரியாகப் பேசுகிறார்கள். அவர்கள்தான் இரட்டை வேடம் போடுகிறார்கள். இதில், அண்ணாமலை எந்த அரசியலையும் செய்யவில்லை” என்கிறார் ஸ்ரீராம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.