வாஷிங்டன்,
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து போஸ்டன் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தது.
விமானம் தரையிறங்க 45 நிமிடங்களுக்கு முன்னர், முதல் வகுப்பு பகுதியை ஒட்டிய அவசரகால கதவு திறந்திருக்கிறது என விமானிக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து, விமான ஊழியர் அந்த பகுதியை ஆய்வு செய்ய சென்றார்.
அப்போது, சந்தேகத்திற்குரிய 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விமான ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் ஊழியர்களை நோக்கி உடைந்த கரண்டி ஒன்றை கொண்டு வீசி, தாக்க முற்பட்டார்.
அவர், விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்று உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அவரை தடுக்க முயன்ற விமான ஊழியரை பயங்கர ஆயுதம் கொண்டு, கழுத்தில் தாக்க முயன்று உள்ளார். இதன்பின்பு, அவர் சக பயணிகள் உதவியுடன் மடக்கி பிடிக்கப்பட்டார்.
அவரை போஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். விமான ஊழியரை பயங்கர ஆயுதம் கொண்டு தாக்க முயன்றதற்காக அந்நபருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க கூடும். 2.5 லட்சம் டாலர் அபராதமும் விதிக்க அமெரிக்க சட்டத்தின்படி வழியுள்ளது.
அந்நபர், மசாசூசெட்சின் லியோமின்ஸ்டர் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ்கோ சிவிரோ டாரஸ் என தெரிய வந்தது. அவரை அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நீதிபதி டெயின் முன் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நாளை மறுநாள் (மார்ச் 9) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.