ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரிய பா.ஜ.க.; மார்ச் 10-ல் விசாரணை

புதுடெல்லி,

நாட்டில் பிரபல தொழிலதிபரான கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது.

இதன் எதிரொலியாக, பங்கு வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. இதனையொட்டி நடந்த ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.

எதிர்க்கட்சியை சேர்ந்த முதல் நபராக அவையில் பேசிய அவர் அப்போது, தொழிலதிபர் அதானியின் சொத்துகளின் வானளாவிய அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டி பேசினார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆய்வு செய்யப்படாத, குற்றஞ்சாட்டக்கூடிய மற்றும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சில விசயங்களை பேசியதற்காக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக, பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் கடந்த பிப்ரவரி 8-ந்தேதி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்து உள்ளார்.

பிரதமர் ஆன பின்னர் மோடியால் அதானியின் விமானம் பயன்படுத்தப்பட்டது என யாராவது நிரூபித்தால் பதவி விலக தயார் என்றும் கூறினார். இதுபற்றி நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி. துபே, பிரதமருக்கு எதிராக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய அனைத்து சான்றுகளையும் அவர் கொடுக்க வேண்டும்.

அப்படி இல்லையென்றால், உரிமை மீறல் நோட்டீசின் கீழ் அவர் உறுப்பினர் அந்தஸ்து இழக்க நேரிடும். பிரதமர் மோடி, பிரதமராக ஆனபின்னர், அதானியின் விமானம் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. எம்.பி.க்களாக இருந்து விட்டால், அவர்களுக்கு எந்தவித உரிமையும் உண்டு என்றால், அவர்களுக்கு கடமைகளும் உள்ளன.

அவையில் ஒருவர் இல்லையென்றால் அவரது பெயரை பற்றி பேச்செடுக்க கூடாது என்றும் பா.ஜ.க. எம்.பி. துபே சுட்டி காட்டி பேசினார். இதுபற்றி மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறும்போது, பிரதமர் மோடிக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க. தலைவர் நிஷிகாந்த் துபே நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்து உள்ளார்.

அவர்கள் என்ன கூறினார்களோ அதற்கு தக்க சான்றுகளை காட்ட வேண்டும். ஆனால், அப்படி எதுவும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. நாட்டு மக்களுக்கு நாம் அனைவரும் பதில் கூற வேண்டியவர்கள். இந்த முறை நோட்டீசின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில், ஜார்க்கண்டை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.யான நிஷிகாந்த் துபேவை மக்களவையின் உரிமை குழு முன் வருகிற 10-ந்தேதி ஆஜராகும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பற்றி உரிமை குழு தலைவரான மக்களவை எம்.பி. சுனில் சிங் தலைமையில் விசாரணை நடைபெறும்.

இதேபோன்று மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷிக்கும் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.