இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன். இசைத்துறையில் பணியாற்ற ஆரம்பித்துள்ள இவர் பாடல்கள் பாடுவது, இசையமைப்பது, ஆல்பங்கள் வெளியிடுவது என ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். வெளிநாடுகள், இந்தியா உள்ளிட்ட பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்திப் பாடல்கள் பாடி வருகிறார்.
அந்த வகையில் கடந்த வாரம் மும்பை ஃபிலிம் சிட்டியில் அமீன் மற்றும் அவரது இசைக்குழுவினர் பாடல் படப்பிடிப்பு செய்து கொண்டிருந்தனர். அப்போது மேடையில் கிரேன் இயந்திரம் மூலம் தொங்கவிடப்பட்டிருந்த பிரமாண்ட மின் விளக்குகள் (Chandelier) மேடையின் நடுவே திடீரென விழுந்தது. மேடையிலிருந்த இசைக்கலைஞர்கள் சுதாரித்துக் கொண்டதால் இந்த எதிர்பாராத விபத்திலிருந்து தப்பித்துவிட்டனர். யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இது பற்றிக் கடந்த ஞாயிறு அன்று அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், எனது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், எனது ஆன்மிக ஆசிரியருக்கும் நன்றி கூறுகிறேன்” என்றும், “நல்ல வேளையாக இந்த விபத்தில் எல்லோரும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினோம். இருப்பினும் அந்த அதிர்ச்சியிலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை” என்று கூறியிருந்தார்.
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், “அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்” என்றும் அமீனின் சகோதரி ரஹீமா ரஹ்மான், “இது இறைவனின் அருள் தம்பி. உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்” என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இது பற்றி விரிவாகப் பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “சில நாள்களுக்கு முன், எனது மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் மற்றும் அவரது ஸ்டைலிங் குழுவினர் ஓர் அபாயகரமான விபத்திலிருந்து தப்பினர். மும்பை ஃபிலிம் சிட்டியில் நடந்த இந்த விபத்தில், இறைவனின் அருளால் யாருக்கும் எந்தக் காயங்களும் ஏற்படவில்லை. நாம் நமது தொழில்துறையை வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்திய செட் மற்றும் படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் பாதுகாப்பை நிச்சயம் உலகத் தரம் வாய்ந்தாக மேம்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
சமீபகாலமாகவே படப்பிடிப்பு தளங்களில் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. அதில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையைச் சரிசெய்யப் படப்பிடிப்புத் தளங்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் தேவை, அதனை நவினத்துவப்படுத்தி மேம்படுத்த வேண்டும் எனப் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.