சியோல்: அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிராக பெரிய அளவிலான நடவடிக்கையை எடுக்கத் தயாராக இருப்பதாக கிம்மின் சகோதரி எச்சரித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா – தென்கொரிய படைகள் கடந்த சில நாட்களாக ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டன. மேலும், இம்மாத இறுதியில் இரு நாடுகளும் மிகப் பெரிய அளவிலான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில், கிம்மின் சகோதரி அமெரிக்கா, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கிம் யோ ஜாங் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “அமெரிக்கப் படைகள் மற்றும் கைப்பாவை தென் கொரிய ராணுவத்தின் அமைதியற்ற ராணுவ நகர்வுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதற்காக எந்த நேரத்திலும் விரைவான பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க தயராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு “நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது” என்று ஜோ பைடன் அரசுக்கு கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.
கிம் யோ ஜாங்: வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். அதிபர் கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார். கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, தன்னுடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கு அரசியலில் முக்கியப் பொறுப்புகள் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.