பாட்னா: வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை பிஹார் முதல்வரிடம் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அளித்தார்.
தமிழகத்தில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகளும், காட்சிப்பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின. பூதாகரமாக வெடித்த இந்த பிரச்சினையில் பிஹார் மற்றும் தமிழக அரசுகள் தலையிட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிஹார் அரசு அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்திற்கு வந்து இங்குள்ள பிஹார் மாநில தொழிலாளர்களிடம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில், நாகர்கோவிலில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இதனிடையே, பிஹார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் வதந்திகள் குறித்தும், பிஹார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்தும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு அளித்த அறிக்கையினை, திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு, பாட்னாவில் முதல்வர் நிதீஷ்குமாரை இன்று (பிப்.7) நேரில் சந்தித்து அளித்தார்.