இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ரகசிய சமூகம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

லண்டன்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி, தென்மாநிலங்கள், வடமாநிலங்களை கடந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் வரையில் அவரது பயணம் அமைந்தது.

காங்கிரசின் இந்த பாதயாத்திரை கடந்த ஜனவரி இறுதியில் நிறைவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் அவர் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார்.

இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, நாட்டின் உள்ளேயும், வெளியேயும் இருந்து நீதிமன்ற அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்த துல்லிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என கூறினார்.

இந்திய ஜனநாயகம் பற்றி ஒருவரும் கேள்வி கூட எழுப்ப முடியாது. ஏனெனில், ஜனநாயகம் நமது ரத்தத்திலேயே ஓடுகிறது. இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு அமைப்புகள் ஆதரவுடன், இந்தியாவுக்கு எதிராக முன்கள தாக்குதலை தொடுப்பதற்கான ஆதரவை இந்த கும்பல் பெறுகிறது.

அவர்கள் இந்திய ஜனநாயகம், இந்திய அரசு, நீதி துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மீதுள்ள நம்பக தன்மை மீதும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவார்கள் என்று கூறினார்.

ஆனால், பிரதமர் மோடிஜியின் தலைமையின் கீழ் இந்தியா மிக பெரிய புத்துணர்ச்சிக்கான பயணத்தில் நடைபோடுகிறது என துக்டே-துக்டே கும்பல் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இந்திய மக்கள் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் கூறினார்.

இந்நிலையில், லண்டன் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயக ரீதியில் போட்டியிடும் இயல்பு முற்றிலும் மாறி விட்டது. அதற்கான காரணம் ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரேயொரு அமைப்புதான்.

அடிப்படைவாத, பாசிச கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்து இந்திய அமைப்புகளையும் தனது பிடிக்குள் வைத்து உள்ளது.

அவர்கள் நமது நாட்டின் வெவ்வேறு அமைப்புகளை எப்படி தங்கள் வசப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள்? என்பது அறிந்து அதிர்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

பத்திரிகை துறை, நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு வழியிலோ அல்லது வேறு வகையிலோ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ரகசிய சமூகம். இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அடிப்படையில் அது கட்டமைக்கப்பட்டது. அதிகாரத்திற்கு வருவதற்கு ஜனநாயக வழியில் போட்டியிடுவது என்ற கருத்தின்படி செயல்படுவது, அதன்பின்னர், ஜனநாயக போட்டியை மறைமுக தாக்குதல் நடத்தி சீர்குலைக்க முயன்று வருகிறது என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.