புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என பரப்பப்படும் வதந்தி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என நூல் பிடித்து சென்றால் வட இந்திய ஊடகங்கள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு போலீஸ் எச்சரிக்கை
வதந்தி பரப்பும் நபர்கள் நாட்டையே பிளவுபடுத்தும் சதிகாரர்கள் என தமிழ்நாடு போலீஸ் கொந்தளிக்க, சம்பந்தப்பட்டவர்கள் எந்த கொம்பனாக இருந்தாலும் விட மாட்டோம் என்று முதல்வர்
எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாந்த் கிஷோர் பரபரப்பு
அதாவது, “தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறுவது உண்மை தான். பொய்யான தகவல் அல்ல. இதுதொடர்பாக பகிரப்படும் வீடியோக்கள் போலி என்று பிகார் துணை முதல்வர் தெரிவித்துள்ளார். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். உண்மையான வீடியோக்களை நான் வெளியிடுகிறேன். சில பத்திரிகையாளர்கள் பகிரும் வீடியோக்கள் பொய்யானவை என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
தாக்குதல் உண்மை தானாம்
அதேசமயம் இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் நடைபெறுகின்றன என்பதை மறந்து விடாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் விரைவில் வீடியோக்களை வெளியிடுவார் எனத் தெரிகிறது. அவை தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீதான நடைபெற்ற தாக்குதல்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திமுகவிற்காக வேலை
மீறி யாராவது வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை பாயும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்படி ஒரு சூழலில் பிரசாந்த் கிஷோர் பேச்சு சர்ச்சையாகி இருக்கிறது. இவர் திமுகவின் வெற்றிக்காக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்காக வேலை செய்தார். அதற்கு முன்பிருந்தே இருதரப்பிற்கும் இடையில் நெருக்கம் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் பிரசாந்த் கிஷோர் மீது திமுக அரசு வழக்குப்பதிவு செய்யுமா?
வழக்குப் பாயுமா?
அவரின் தகவல்களில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய தீவிரம் காட்டுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோர் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர். அங்கு அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். விரைவில் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
பிகாரை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள பிரசாந்த் கிஷோர், உண்மையை உலகிற்கு உணர்த்துவாரா? இல்லை சில ஊடகங்கள், பாஜகவினர் செய்ததை போல் மீண்டும் வதந்திகளை பரப்பி மாட்டிக் கொள்வாரா போன்ற கேள்விகள் எழுகின்றன.