திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். நேற்று இரவு முதல் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். கடந்த பல வருடங்களுக்கு முன்பே இங்கு பொங்கலிடுவதற்காக 15 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் குவிந்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. உலகிலேயே ஒரே இடத்தில் லட்சக்கணக்கில் பெண்கள் திரண்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வேறு எங்கும் கிடையாது. வருடம்தோறும் ஆற்றுகாலில் பொங்கலிட குவியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பெண்கள் இங்கு அதிக அளவில் வரவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதால் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பொங்கலிடுவதற்காக பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்து உள்ளனர்.
இதனால் நேற்று முதல் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்துள்ளது. தம்பானூர், கிழக்கே கோட்டை, மணக்காடு உள்பட நகரின் பல்வேறு பகுதிகள் முழுவதும் பொங்கல் பானைகளால் நிரம்பின. ஏராளமானோர் பல நாட்கள் முன்பே பொங்கலிடுவதற்காக கயிறு கட்டியும், செங்கலை அடுக்கி வைத்தும் இடத்தை பிடித்து முன்பதிவு செய்து வைத்திருந்தனர். இன்று காலை 10.30 மணிக்கு ஆற்றுகால் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது. அதன் பிறகு கோயிலின் 8 கிமீக்கு மேல் சுற்றளவில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பெண்கள் தங்களது அடுப்புகளில் தீ மூட்டி பொங்கலிடத் தொடங்கினர்.
அப்போது பொங்கல் அடுப்புகளிலிருந்து எழுந்த புகையால் திருவனந்தபுரம் நகரமே புகை மண்டலத்தால் மூடப்பட்டது. பிற்பகல் 2.30 மணியளவில் பொங்கல் பானைகளில் நிவேத்யம் செய்யப்பட்டது.
இதன்பிறகு தங்களது வேண்டுதலை ஆற்றுகால் பகவதி அம்மன் நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் லட்சக்கணக்கான பெண்களும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பொங்கலை முன்னிட்டு நாகர்கோவில், எர்ணாகுளம், கொல்லம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில்களும், பஸ்களும் இயக்கப்பட்டன. பாதுகாப்புக்காக 3,500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நாளை குருதி தர்ப்பணத்துடன் இவ்வருட ஆற்றுகால் கோயில் பொங்கல் விழா நிறைவடைகிறது.