பா.ஜ.க-வின் ஐ.டி விங் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, “பா.ஜ.க-வில் என்னால் முடிந்தவரை பல சங்கடங்களைக் கடந்து, உண்மையாக, நேர்மையாக உழைத்தேன். வேதனை மட்டுமே மிச்சம். விடைபெறுகிறேன்” என ட்விட்டரில் தன் ராஜினாமாவை அறிவித்திருந்தார். பா.ஜ.க-விலிருந்து விலகியதோடு மட்டுமல்லாமல், அதே சூட்டோடு அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பா.ஜ.க ஐ.டி விங் மாநிலச் செயலாளர் திலீப்கண்ணன், தன் ராஜினாமா குறித்து ஃபேஸ்புக்கில் “இன்னும் இந்த வார் ரூம் கோஷ்டி என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்பப்போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிவிட்டிருந்தார். பிறகு இவரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க-விலிருந்து ஆட்கள் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகியிருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பா.ஜ.க நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் இணைந்தது குறித்துப் பேசிய அண்ணாமலை, “திராவிட கட்சிகளைச் சார்ந்து தான் பா.ஜ.க வளரும்ன்னு ஒரு குற்றச்சாட்டு இருந்துச்சு… திராவிட கட்சிகளில் இருந்து ஒரு நாலு பேரை, பா.ஜ.க உள்ள கொண்டு வந்தா தான் பா.ஜ.க வளரும்ன்னு.
இன்னைக்கு பா.ஜ.க-வில் இருந்து ஆட்களை கூட்டிட்டு போனா தான் திராவிட கட்சிகள் வளரும் இன்ற நிலைமை தமிழ்நாட்டுல வந்திருச்சு. அவங்க வயசு என்ன, எங்க வயசு என்ன. அவங்க எத்தனை முறை முதலமைச்சர்களாக இருந்திருக்காங்க, நாங்க எத்தனை முறை தமிழ்நாட்டுல முதலமைச்சராக இருக்கோம்… இது பா.ஜ.க-வோட வளர்ச்சியை தமிழ்நாட்டுல காட்டுது” என்றார்.