புதுடெல்லி: வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவ் பத்து நாட்களில் தமிழகத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பிரசாந்த் உம்ராவை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி சென்று தேடி வருகிறது.
இந்த நிலையில், பிரசாந்த் உம்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பிரசாந்த் உம்ராவ் மீது தவறாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் நீண்ட தூரத்தில் உள்ளது. அதனால் 12 வார காலம் இடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி,விமானம் மூலம் செல்லலாம் அது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது என தெரிவித்தார்.
இதையடுத்து முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஹெக்டே மற்றும் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர் இந்த விவகாரத்தில் பிரசாந்த் உம்ராவ் செய்தது என்பது சட்ட விதிகளுக்கு முரணானதாகும். மேலும் அவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் வகையிலான தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாக கூட அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவரது செயல்பாட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
வேண்டுமென்றே புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பி உள்ளனர். இதையடுத்து மாநில அரசு மற்றும் தமிழக காவல்துறையின் சிறப்பான அணுகு முறையால் தற்போது அது வதந்தி என்று நிரூபணம் செய்யப்பட்டு, இப்போது மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவுகிறது. இருப்பினும் இதுபோன்ற சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலான செயலில் ஈடுபட்ட பிரசாந்த் உம்ராவ் தவறு செய்து விட்டு இதுவரையில் மன்னிப்பு கூட கேட்கவில்லை. இவரது செயல்பாடு ஒட்டுமொத்த இந்தியாவையே பிளவுபடுத்தும் செயலாகும். அதனால் பிரசாந்த் உம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்க கூடாது. மேலும் அவரை தமிழக காவல்துறையிடம் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,‘‘இந்த விவகாரத்தில் பிரசாந்த் உம்ராவுக்கு 12 வார காலம் இடைக்கால முன்ஜாமீன் வழங்க முடியாது. இதில் தமிழகத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பத்து நாட்களுக்குள் அதாவது மார்ச் 20ம் தேதிக்குள் அவர் ஆஜராக வேண்டும். இதைத்தொடர்ந்து வேண்டுமானால் அங்கு மனுதாரர் முறையிட்டு நிவாரணம் கேட்கலாம். மேலும் மனுதாரரான பிரசாந்த் உம்ராவ் தனது வீட்டு முகவரி, தொடர்பு எண்கள் ஆகிய அனைத்தையும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தார்.