முன்னாள் காதலன் துன்புறுத்தல், முகம், உடலில் காயங்கள்; புகைப்படங்களுடன் நடிகை உருக்கமான பதிவு!

தமிழில் `விஷமக்காரன்’, `எங்க பாட்டன் சொத்து’, `கே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அனிகா விக்ரமன். இவர், தன்னை முன்னாள் காதலன் தாக்கியதாக சமூக வலைதளம் மூலம் பரபரப்பான குற்றச்சாட்டைப் பதிவிட்டுள்ளார். அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அனிகா

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பதிவில், “நான் அனூப் பிள்ளை என்பவரை சில ஆண்டுகளாகக் காதலித்தேன். அவர் என்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்தினார். என் வாழ்வில் இப்படி ஒருவரை நான் பார்த்ததே இல்லை. என்னை தாக்கிவிட்டு மிரட்டவும் செய்வார். அவர் இப்படி நடந்து கொள்வார் என நான் கனவில் கூட நினைக்கவில்லை.

முதன்முறையாக சென்னையில் என்னைத் தாக்கி விட்டு என் காலில் விழுந்து கதறி அழுதார். இரண்டாவது முறையாக பெங்களூருவில் இருக்கும்போது தாக்கினார். அப்போதுதான் இனி இவரை நம்பி பலன் இல்லை என்று போலீஸில் புகார் அளித்தேன். இவரால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். சில ஆண்டுகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறேன்.

அனூப் பிள்ளையை விட்டு விலக முடிவு செய்துவிட்டேன், ஆனாலும் அவர் என்னை விடாமல் துரத்துகிறார். நான் ஷூட்டிங் போவதில் அவருக்கு விருப்பமில்லை. என் போனை உடைத்துவிட்டார். எனக்கே தெரியாமல் எனது வாட்ஸ்ஆப்ப அவரது லேப்டாப் உடன் லிங்க் செய்து வைத்துள்ளார். என் தொலைப்பேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. தற்போது நான் ஹைதராபாத் வந்துவிட்டேன், அது தெரிந்து அனூப் என் போனை லாக் செய்துவிட்டார். என் போனுக்காக நான் அவரிடம் கெஞ்ச வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

என்னை விட நான்கு மடங்கு எடை உடைய அவர் என் மீது அமர்ந்து கொண்டு என் முகத்தை முழுவதுமாக மூடினார். என்னால் மூச்சுக்கூட விடமுடியவில்லை. அன்றுதான் என் கடைசி இரவு என நினைத்தேன், ஆனால் எப்படியோ அவரிடம் இருந்து தப்பி பாத்ரூமுக்குள் சென்று மறைந்துகொண்டேன். விடிய விடிய அங்குதான் இருந்தேன்.

எனது முகத்தை காயப்படுத்தினார். இந்த முகத்தை வைத்து எப்படி நடிப்பாய் என்று பார்க்கிறேன் என்று ஏளனம் செய்தார். நான் கண்ணாடியைப் பார்த்து அழும்போது கூட, `உன் நாடகம் நன்றாக இருக்கிறது’ என்று மன உளைச்சல் அடையும்படி பேசினார். இப்போது அவரை விட்டு முழுமையாக விலகிவிட்டேன். தைரியமாக அவர் மீது புகார் அளித்துள்ளேன். ஆனால், அனூப் பிள்ளை இன்னும் எனக்கு மிரட்டல் விடுக்கிறார். அவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் இப்போது இருக்கிறார். இதுபற்றி நான் புகார் அளித்துள்ளேன். தற்போது நான் முழுமையாக குணமடைந்துவிட்டேன். மீண்டும் ஷூட்டிங் செல்ல தொடங்கியுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.