உண்மையிலேயே பெண் என்பவள் ஆணை விட பலவீனமானவளா.. ?

இன்று மார்ச் 8 – சர்வேதேச மகளிர் தினம்… நாம் ஆண்டுதோறும் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம் துவங்கியதெல்லாம் 1913-ல் இருந்து தான். பிரெஞ்சு புரட்சியின் போதே பெண்கள் தனக்கான சம உரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சரி, பெண்கள் உண்மையிலேயே சுதந்திர உணர்வோடு தான் வாழ்கிறார்களா என்று கேட்டால், அதற்கு எப்போதும் பதில் பெரிய கேள்விக் குறி தான்?

ஏன் அப்படி?

பெண் என்பவள் ஆணை விட பலவீனமாவள் என்ற கருத்து எப்போதும் நம்மிடையே உள்ளது. உண்மையில் அப்படியென்றால் பி.டி.உஷா ஓட்டப் பந்தயத்திலும் கல்பனா சாவ்லா விண்வெளிக்கும் சானியா மிர்சா டென்னிஸ் போட்டியிலும் மேரி கேம் குத்துச்சண்டையிலும் இன்னும் ஏராளமான தொழிலுக்கு போயிருக்கவே முடியாது இல்லையா?

வீட்டு அடுப்படியை தாண்டி வந்து விடுவதா முழு சுதந்திரம்? சுதந்திர போராட்டகளத்தில் பங்கேற்ற பெண் தலைவர்கள் ஒரு பத்து பேரை சொல்லத் தெரியுமா நமக்கு?

கஸ்தூரிபா காந்தி, வேலு நாச்சியார், ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு மட்டுமா? ராணி சென்னம்மா, ராணி லட்சுமிபாய், ராணி அவந்திபாய், ஜானகி ஆதி நாயகன், அன்னி பெசன்ட், ருக்மணி லட்சுமதி, விஜயலட்சுமி பண்டிட், மீராடென் இன்னும் எத்தனை எத்தனை பெண்கள் அவர்தம் ஆளுமைகள். நாம் ஏன் இவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை?

1943-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணியின் தைரியத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பெயரில் மகளிர் படையை நடத்தினார்.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோள்சீலை போராட்டம் நடைபெற்றது.

சுமார் 37 ஆண்டு கால போராட்டம் மூன்று கட்டமாக நடைபெற்று பெண்கள் மேலாடை அணிவதற்கான உரிமையைப் பெற்றனர்.

பார்த்தீர்களா நாம் உடை அணிய கூட போராடித் தான் உரிமை வாங்கி இருக்கிறோம்.

அது மட்டுமா சாவித்திரி பாய் புலே பெண்கல்விக்கான பள்ளியை முதன் முதலிக் 1848-ல் தொடங்கினார். அதற்காக அவரின் எதிர்ப்பாளர்கள் கல்லாலும் மலத்தாலும் அவரை அடித்தனர். அதையெல்லாம் தாண்டி அவர் தினந்தோறும் பெண்களுக்கு கல்வியை போதித்தார். 1863 ஆம் ஆண்டு விதவைகள் தலையை மொட்டை அடிப்பதை எதிர்த்தும், 1870-ல் 52 அனாதை குழந்தைகளுக்கான விடுதி ஒன்றையும் நடத்திவந்தார். இதெல்லாம் பெண்களாகவே முன்னெடுத்து வந்திருந்த மாற்றங்கள்.

காந்தி தன் மனைவியை பெண் என்ற காரணத்தால் முன்பு அவரை ஒதுக்கினாலும் பிற்காலத்தில் அவரையும் ஒத்துழையாமை இயக்கத்தோடு இணைத்துக் கொண்டார். அதேபோல் ஈ.வெ.ரா வும் தனது மனைவி நாகம்மா மற்றும் தங்கை கண்ணம்மாவை மதுக்கடை ஒழிப்பில் பங்கு பெற செய்தார்.

நாம் ஏன் இதையெல்லாம் பற்றி பேச வேண்டும்.

ஒரு முறை என் பள்ளித்தோழன் என் தோழியை ‘பெட்டை’ என்று திட்டிவிட்டான். அந்த வார்த்தையை என்னால் இன்னும் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.

“உனக்கு எத்தனை பிள்ளைப்பா?”

“இரண்டு பொண்ணு குழந்தைக ஆத்தா…”

“அட இரண்டு பெட்டைய பெத்து எப்படி கரை சேர்க்க போறயோ? பொம்பளப் பிள்ளைய பெத்துக்கிட்டா வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டுதான் அலையணும்.” – இதுபோன்ற புலம்பல்களை கேட்டிருக்கிறேன்.

பெட்டை நாயை வைத்து சம்பாதிக்க நினைக்கும் ஒருத்தர்; பெட்டை பசுவை வைத்து பால் கரக்கும் ஒருத்தர்; பெட்டையில் இருந்து வந்த ஒருத்தர் ‘பெட்டை’ என்ற சொல்லை பெண்களை ஏச பயன்படுத்துவது எவ்வளவு இழிவான செயல் இல்லையா?

பெண்கள் அத்தனை மட்டமானவர்களா என்ன?

‘Having Daughter is Not a tension, she is equal to 10 sons.’ – எத்தனை அழகான வாக்கியம் இது.

புதிதாய் வயதுக்கு வந்த பெண்ணிடம் அவள் உடல் மாற்றங்களை பற்றிய செய்திகளை போதிக்காமல், ‘அங்க நிக்காதே’ ‘இங்க உக்காராதே’ ‘ஆண்களிடன் பேசாதே’ ‘நெஞ்சை நிமிர்த்தி நடக்காதே’, ‘சத்தமாய் சிரிக்காதே’ என கட்டளை இடுவதைப் பார்க்கிறேன். இது எல்லா காலத்திற்கும் பொருந்துவதகாகவே இருக்கிறது.

நாப்கினை கூட மறைத்தும் ஒளித்தும் எடுத்து வர வேண்டிய நிலைதான். இன்னும் கிராமப்புறங்களில் மாறாத நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுகாதாரமோ சுதந்திரமோ அவசியமாய் படுவதில்ல. காலம் காலமாக ஆண்கள் சொல்வதை கேட்டும் இயந்திரம் மாதிரி இயங்கியுமே பழகிவிட்டது. ஆக இப்போதும் இரு வேறு வகையான பெண்களை நம்மால் காண முடிகிறது.

இன்றளவில் பெண்கள் இல்லாத துறையே இல்லை. மண்ணில் இருந்து விண் வரைய வசப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்தப் பெண்களே தற்காலத்தில் பாலியல் வன்கொடுமைகளை அனுபவிக்கின்றனர். சுற்றுப்புற சூழல் மட்டும் அல்லாது தன் குடும்பத்திலிருந்தே இப்படியான பிரச்னைகளை பார்த்துக்கொண்டு வருகிறார்கள்.

இன்றைக்கு நாம் போடும் ஆடைகளை விமர்சனம் செய்வோர் நமது பாதுகாப்பிற்கு வழி சொல்வதில்லை. ஆக, ஆடை என்பது ஒரு உடை என்பதை தவிர அதில் ஒன்றும் இல்லை. கலாசாரத்தையும் பண்பாட்டையும் பெண்ணுறுப்பை வைத்து அவளை நிர்ணயிப்பது அர்த்தமற்றதே.

உண்மையில் பாரதி சொன்னாற் போல ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொண்டால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்.’

ஆக, நிகர் என்பது உடுத்தும் உடையிலோ நமது பழக்கவழக்கத்திலோ இல்லை; நமது உணர்வாலும் செய்யும் செயல்களாலும் தான் என்பதை என்றைக்கு உணர்கிறோமோ… பெண்ணை சக பயணியாக எப்போது நினைக்கிறோமோ… அப்போது தான் உண்மையான மகளிர் தின கொண்டாட்டம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.