இயற்கையாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் எளிய உணவுகள்…| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 11

‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

கேள்வி: டாக்டர், எனக்கு உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக, 38வது வாரத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பால் போதுமான அளவு சுரக்காத காரணத்தால், 5-வது நாளிலிருந்து, தாய்ப்பாலுடன் பவுடர் பாலையும் பாலாடையில் குழந்தைக்கு அளித்திட மருத்துவர் அறிவுறுத்தினார்; தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க ‘Domperidone’ என்னும் மருந்தையும் தொடங்கினார்.

தாய்ப்பால் சுரப்பினை அதிகரித்திடும் உணவுப் பொருள்கள் என்னென்ன? தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றால், பவுடர் பால் தான் தர வேண்டுமா? பசும்பாலை கொடுக்கக் கூடாதா? தாய்ப்பால், பவுடர் பால் மற்றும் பசும்பாலிலுள்ள வேறுபாடுகள் என்ன?

கடந்த மூன்று அத்தியாயங்களாக தாய்ப்பால் சுரத்தல் குறித்தும், தாய்ப்பாலின் சிறப்புகள் குறித்தும் விரிவாகக் கண்டோம். குறிப்பாக 7-வது அத்தியாயத்தில், கவலை, மன அழுத்தம், வலி மற்றும் நம்பிக்கையின்மை போன்றவை, ஆக்ஸிடோசின் மறிவினையில் இடையூறு ஏற்படுத்துவதால், பால் சுரத்தல் மிகவும் குறையக்கூடும் என்பதையும், மன அமைதி மற்றும் நம்பிக்கையுடன் தாய்ப்பால் அளிக்கும்போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

தாய்ப்பால் கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் நான்கு நிலைகள் மற்றும் நான்கு இணைப்பு படிகளை (Four Steps of Positioning and Attachment) உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு, தாய்ப்பால் கொடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளுக்குப் பிறகும், தாய்ப்பால சுரப்பு போதுமாக இல்லாத காரணத்தினால் தான், தங்களின் மருத்துவர் பவுடர் பாலும் தாய்ப்பால் சுரத்தலை அதிகரித்திட டோம்பெரிடோன் (Domperidone) மருந்தினையும் தொடங்கியிருக்கக் கூடும்.

தாய்ப்பால்

தாய்ப்பால் சுரத்தல் போதுமான அளவு இல்லையென்றால், தாய்ப்பால் சுரத்தலை அதிகரித்திட டோம்பெரிடோன் (Domperidone) மற்றும் மெட்டோக்ளோப்ரமைடு (Metoclopramide) ஆகிய மருந்துகள், மருத்துவர்களால் மிக பொதுவாக கொடுக்கப்படுகின்றன. டோம்பெரிடோன் மற்றும் மெட்டோக்ளோப்ரமைடு ஆகிய மருந்துகள் புரோலாக்டின் (Prolactin) ஹார்மோனின் அளவினை உயர்த்துவதன் மூலம், தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கின்றன. எனினும், தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க டோம்பெரிடோன், மெட்டோக்ளோப்ரமைடு அல்லது ஆயுர்வேத மருந்துகளை மருத்துவர் அறிவுறுத்தலில் மட்டுமே, அவர் குறிப்பிட்ட டோஸ் மற்றும் நாள்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களில், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தினந்தோறும் கூடுதலாக 600 கிலோ கலோரிகளும், 13.6 கிராம் புரதமும் தேவைப்படுகின்றன. எனவே, உணவு முறையை கூடுதல் கலோரி மற்றும் புரதம் கிடைக்கும் வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும். உணவில் 30% புரதம் கிடைக்கும் வகையில் முட்டை, பால், பருப்பு வகைகள், மீன் மற்றும் இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தினந்தோறும் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்:

வெந்தயம்:

பல தலைமுறைகளாக தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க வெந்தயம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளதால், குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும். வெந்தயப் பொடியை தேநீருடன் பருகி வரலாம். வெந்தயக் கீரையில் வைட்டமின், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம்:

பெருஞ்சீரகம் தாய்ப்பாலை அதிகரிப்பதுடன் வயிற்று வலியையும் சரிசெய்யும். தூங்குவதற்கு முன், ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை ஊற வைத்து காலையில் அந்த நீரை நேரடியாகவோ, தேநீருடன் சேர்த்தோ பருகலாம்.

பூண்டு:

பூண்டு, தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கவல்லது.

கீரை வகைகள்:

பாலக் கீரை, பரட்டைக் கீரை (Kale), வெந்தயக் கீரை மற்றும் கடுகுக் கீரையில் வைட்டமின், கால்சியம் மற்றும் இரும்பு சத்துகள் நிறைந்துள்ளன. இவை தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கின்றன. தினந்தோறும் ஒரு வேளையாவது உணவில் கீரையைச் சேர்த்துக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாலக்கீரை

சீரகம்:

சீரகம், தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன், செரிமானத்தை அதிகரித்து மலச்சிக்கல், அசிடிட்டி போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது. சீரகத்தில் வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. தூங்குவதற்கு முன், ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை ஊற வைத்து காலையில் அந்த நீரை பருகி வரலாம்.

ஓட்ஸ்:

ஓட்ஸில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு உகந்தது. சர்க்கரைநோய் உள்ள தாய்மார்களுக்கு சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திட உதவிடும். மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

எள்:

எள், தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன், கால்சியம் தேவையையும் பூர்த்தி செய்யக் கூடியது.

கேரட்:

வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ள கேரட், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது. கேரட்டை ஜூஸாகவோ சாலடாகவோ தினந்தோறும் உட்கொள்ளலாம்.

பச்சை பப்பாளி

துளசி:

துளசி, தாய்ப்பால் சுரப்பையும் பசியையும் தூண்டக் கூடியது.

பப்பாளிக்காய்:

பப்பாளிக்காய், ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்மோன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் மற்ற உணவுகளின் தொடர்ச்சியை அடுத்த வாரம் காண்போம்.

பராமரிப்போம்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.