திருத்தணி ஊராட்சித் ஒன்றியக் குழு தலைவர் தங்கதனம் திமுக-வில் இருந்து விலகி இன்று, தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த இரு வருடமாக அதிமுகவின் தலைமை பிரச்சனை நடந்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஈரோடு இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று, அதிமுகவின் வலிமையான ஒற்றைத்தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்துள்ளார்.
இதனையடுத்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். கடந்த இரு தினங்களாக பாஜகவின் முக்கிய புள்ளிகள் இருவர் இணைந்து உள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவிலிருந்து திமுகவிற்கு சென்ற திருத்தணி ஊராட்சித் ஒன்றியக் குழு தலைவர் தங்கதனம் இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார்.
இவரின் கடந்த கால வரலாறு :
திருத்தணி ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 12 கவுன்சிலர்களில் திமுக 4, காங்கிரஸ் 1, அதிமுக 6, பாமக ஒரு இடத்தில் வெற்றிபெற்றனர்.
தற்போது ஒன்றிய குழு தலைவராக பதவி வகித்து வரும் தங்கதனம், அ.தி.மு.க., ஆதரவுடன் ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார். துணை தலைவராக அதிமுக இ.என்.கண்டிகை ரவி பதவி வகித்து வருகிறார்.
கடந்த 18 மாதங்களுக்கு முன் ஒன்றிய குழு தலைவர் தங்கதனத்திற்கும், துணைத் தலைவர் கண்டிகை ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தங்கதனம், ஸ்டாலின் முன்னிலையில் திமுக.,வில் இணைந்தார்.
இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தங்கதனம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற இதில், ஒன்பது கவுன்சிலர்கள் தங்கத்தனத்திற்கு எதிராக வாக்களித்தனர். 10 பேர் எதிர்த்து வாக்களித்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றிருக்கும்.
ஆனால், இரண்டு கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தும், ஒருவர் ஆதரவு தெரிவித்தும், ஓட்டு போட்டதால் இரண்டாவது முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் தான் இன்று தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார் தங்கத்தனம்.
மீண்டும் அவர் அதிமுகவில் இணைந்துள்ளதால், இனி தனது பதவிக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் தனது பணியை செய்வார் என்று முணுமுணுக்கிறது திருத்தணி வட்டாரம்.