இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக சுமூகமான உறவு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது. 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி, இந்திய எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் ஆயுதங்களுடன் வந்து இந்திய வீரர்களைத் தாக்கினர். அப்போது, இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பலருக்கு காயங்கள் ஏற்பட்டன. அந்த சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்திலிருந்து இந்திய – சீன எல்லையில் அமைதியின்மை நிலவிவருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாச்சலப்பிரதேசம் தவாங் செக்டாரில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கட்டைகள், தடிகள் கொண்டு தாக்கிக்கொண்டனர். அதில், இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டன.
அந்த சம்பவம் நிகழ்ந்தபோது, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தது. ஆனால், அந்த சம்பவம் குறித்து இந்திய அரசு தகவல் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் நாடாளுமன்றத்தில் கொந்தளித்தனர். அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஆளும் தரப்பு ஏற்கவில்லை.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ராணுவ ரீதியிலான பதற்றம் நிலவிவரும் சூழலில், சீனத் தயாரிப்பு செல்போன்களைப் பயன்படுத்துவது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்திய ராணுவத்தினரும், அவர்களின் குடும்பத்தினரும் சீனா செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பாதுகாப்புத்துறை உளவு அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன. ஏற்கெனவே, இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீனாவின் மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது. டிக்டாக் உட்படபல செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவுடன் தொடர்புடைய பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் செயலிகளும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஜியோமி, விவோ, ஒப்போ, ஒன் பிளஸ், ஹானர், ரியல்மி, ஜியோனி, இன்ஃபினிக்ஸ், இஸட்.டி.இ உள்பட சீனா நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட செல்போன்களை பெரும்பாலோர் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில்தான், சீனத் தயாரிப்பு செல்போன்களை ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கு எதிராக இந்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உளவு அமைப்புகள், ‘இந்திய ராணுவத்தினர் சீனத் தயாரிப்பு செல்போன்களைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்’ என்று பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளன.
சீனத் தயாரிப்பு செல்போன்களில் உளவு மென்பொருள் வைக்கப்பட்டிருப்பதாக உளவு அமைப்புகள் சந்தேகம் எழுப்புகிறது. ‘ஏற்கெனவே, சீனா செல்போன்களிலிருந்து சந்தேகத்துக்குரிய செயலிகள் ராணுவ உளவுத்துறையினரால் நீக்கப்பட்டிருக்கின்றன. அதனால், சீனா செல்போன்களையும் சீனா செயலிகளையும் பயன்படுத்துவதை பாதுகாப்புத்துறைகள் நிறுத்திவிட்டன. எனவே, ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களும் சீனா செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது’ என்று உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.