`இது டிஜிட்டல் யுகம்… பெண்கள் எல்லாம் அரசியலில் கோலோச்ச ஆரம்பித்துவிட்டார்கள்’ …இப்படி பேசப்படும் இந்த 2023-லும்கூட ஒரு ஜோதிமணி, குஷ்பு, காயத்ரி ஜெயராம், வானதி சீனிவாசன், டாக்டர் தமிழிசை, கனிமொழி என்று பலரும் ‘கல்’லடி படத்தான் செய்கிறார்கள். எங்கே சறுக்குவார்கள்… எப்போது காலை வாரிவிடலாம்… கேவலப்படுத்தலாம்… `பொம்பளைக்கு இதெல்லாம் தேவையா?’ என்று கைகொட்டி சிரிக்கலாம், வீடியோ போடலாம், மீம்ஸ் போடலாம்… இப்படித்தான் ஆணாதிக்க மனப்பான்மையாளர்கள் யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நிலைமை இப்படியிருக்க… `பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே தவறு’ என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருந்தாலும், இந்தியப் பெண்களுக்கு இன்றுவரையிலும்கூட முழுமையான சுதந்திரம் கிடைத்தபாடில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த அந்த 1940 -களிலேயே… அரசியலில் காலடி பதித்து, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து, கடைசிவரை ஓர் ஆளுமையாகவே வாழ்ந்து முடித்த வெகுசிலரில், குறிப்பிடத்தக்க ஒருவர் சத்தியவாணி முத்து!
சென்னை மாநகரின், ஜார்ஜ் டவுன் பகுதியில் வசித்த நாகைநாதன் மற்றும்- ஜானகி அம்மாள் தம்பதியின் மகளாக, 1923 பிப்ரவரி 15 அன்று பிறந்தவர் சத்தியவாணி. நீதிக்கட்சியின்பால் தீவிர ஈடுபாடு கொண்ட நாகைநாதன், சுயமரியாதை இயக்கத்திலும் பற்றுகொண்டிருந்தார். சிறுவயது முதலே சுயமரியாதைக் கொள்கைகளை ஊட்டி வளர்த்தவர், கல்வி கற்கவும் தூண்டினார். எழும்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்த சத்தியவாணி, பின் ஹோமியோபதி படித்து மருத்துவரானார்.
ஆரம்பத்தில் அம்பேத்கரின், அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பில் செயல்பட்ட சத்தியவாணி, கூடவே பகுத்தறிவு இயக்கத்தோடும் தொடர்பிலிருந்தார். 1949-ல் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டவர், இயக்கத்தின் முதன்மையான பெண் தலைவர் என பரிமளித்தார். இந்தி எதிர்ப்பு, குலக்கல்வி திட்ட எதிர்ப்பு என்று பல போராட்டங்களுக்கும் பெண்களைத் திரட்டி தீவிரமாகக் களத்தில் நின்ற சத்தியவாணி, பல தடவை சிறையிலும் அடைக்கப்பட்டார்.
சென்னை, மாநகராட்சியில் பணியாற்றிய எம்.எஸ்.முத்து என்பவருக்கு சத்தியவாணியை மணமுடித்தனர். திருமணத்தை திரு.வி.க. முன்னின்று நடத்தினார். 1957-ம் ஆண்டு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கி வெற்றிபெற்ற சத்தியவாணி முத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறால் முத்து மறைந்துவிட்ட நிலையிலும், அரசியலில் தன்னுடைய தீவிரத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை சத்தியவாணி முத்து.
1967-ம் ஆண்டு, தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. சத்தியவாணி முத்து, எட்டு பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியலில் ஒரே பெண்ணாக இடம்பிடித்தார். அலுவல் சார் வெளிநாட்டுப் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். ‘என்னுடைய அமைச்சரவையின் சகா மேற்கொள்ளும் முதல் பயணம்’ என்று அவரை வழியனுப்பவும், மீண்டும் வரவேற்கவும் நேரில் சென்றார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்குக் காரணம்… சத்தியவாணி முத்துவின் அபரிமிதமான ஆளுமைதான்!
அண்ணா மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் தலைமையிலான அரசிலும் அமைச்சராக நீடித்த சத்தியவாணி, ஆதிதிராவிடர் நலத்துறை, மீன் வளத்துறை, சுகாதாரத் துறை, செய்தித் துறை என்று பல துறைகளிலும் பொறுப்புடன் பணியாற்றினார்.
‘ஐந்து லட்ச ரூபாய் நிதியை ஒருவர் திரட்டிக் கொடுத்தால், அரசாங்கம் புதிதாக ஒரு கல்லூரியைத் தொடங்கும். அவர்க்ள் விரும்பும் பெயரும் கல்லூரிக்குச் சூட்டப்படும்’ என்று அப்போது அரசு அறிவித்திருந்தது. நட்சத்திர இரவு, நட்சத்திர கிரிக்கெட் போட்டி போன்றவற்றை எம்.ஜி.ஆர் மூலமாக நடத்திய சத்தியவாணி முத்து, நிதியைத் திரட்டிக்கொடுக்க, இந்தியாவிலேயே முதல்முறையாக அம்பேத்கர் பெயரில் தமிழகத்தில் கல்லூரி தொடங்கப்பட்டது.
கருணாநிதியிடம் தொடக்கத்திலிருந்தே நட்பு பாராட்டிவந்த சத்தியவாணிதான், அண்ணா மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கு கருணாநிதியின் பெயரை வழிமொழிந்தவர்களில் முக்கியமானவர். அதேசமயம், 1974-ம் ஆண்டு, தன்னுடைய ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு குறித்து சட்டமன்றத்திலேயே கருணாநிதியை எதிர்த்துக் கேள்வி எழுப்பினார். `அண்ணா, அம்பேத்கர் வழியைப் பின்பற்றாது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவதன் மூலம் அந்த மக்களை வஞ்சிக்கிறார் கருணாநிதி’ என்று குற்றம்சாட்டினார்.
பிரச்னை பெரிதாக வெடிக்கவே, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் கருணாநிதி. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு மேலவை உறுப்பினர்கள், இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியிலிருந்து வெளியேறிய சத்தியவாணி முத்து, `தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்‘ என்கிற புதிய கட்சியைத் தொடங்கினார். 1977 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து, உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால், தி.மு.க-விடம் தோற்றுப்போனார். அதேசமயம், அந்தத் தேர்தலில் தமிழக அளவில் அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று, எம்.ஜி.ஆர் முதல்வரானார். இதையடுத்து, தன்னுடைய கட்சியைக் கலைத்துவிட்டு, அ.தி.மு.க-வில் உறுப்பினரானார் சத்தியவாணி முத்து. 1979-ம் ஆண்டு சரண்சிங் பிரதமராகப் பதவியேற்றபோது, மத்திய அமைச்சராக்கப்பட்டார்.
இறுதி மூச்சுவரை பெரியாரின் கொள்கையைப் பின்பற்றிய சத்தியவாணி முத்து, `அன்னை’ என்கிற இதழை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திவந்தார். ‘எரிக்கப்பட்டாள்’, ‘எனது போராட்டம்’ என்கிற நூல்களையும் எழுதியுள்ளார்.
நாகம்மையார், மலர்முகத்தம்மையார், அன்னை மீனாம்பாள் சிவராஜ், நீலாவதி ராமசுப்பிரமணியம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தருமாம்பாள், குஞ்சிதம் குருசாமி, அன்னை மணியம்மையார், முத்துலட்சுமி ரெட்டி என விரல்விட்டு எண்ணக் கூடிய பெண்களே அரசியலில் ஈடுபட்ட அக்காலத்தில், இளம்வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் சத்தியவாணி!
ஒன்பது முறை சிறை சென்றவர்; இரண்டு முறை கர்ப்பிணியாக இருந்தபோது கைது செய்யப்பட்டு, சிறை சென்றார். இரண்டு முறை, கைக்குழந்தையை வைத்துக் கொண்டு கைதாகி இருக்கிறார். மகன் தவழ்ந்து ஜெயில் கம்பிகள் வழியாக வெளியே சென்று விடாமலிருக்க தனது முந்தானையால் கட்டி வைத்திருப்பாராம். தன்னிகரில்லா அரசியல் போராளியாக வாழ்ந்த சத்தியவாணி முத்து, புற்றுநோய் பாதித்து, 11.11.1999 அன்று 76-ம் வயதில் மறைந்தார். இந்த அளவுக்கு தமிழக அரசியலில் ஆளுமை செலுத்திய அவருக்கு, இது நூற்றாண்டு!
சமீபத்தில் நடைபெற்ற அவருடைய நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், `ஒரு சத்தியவாணி முத்து அல்ல, ஓராயிரம் சத்தியவாணி முத்துகள் நம் கழகத்தில் உருவாக வேண்டும்’ என்று பெருமையோடு பேசினார்.
நூற்றாண்டுகள் கடந்த பின்னும், சமூகத்தில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் எந்தளவு கிடைத்துள்ளன என்கிற கேள்வி இன்னமும் நீடிக்கிறது. இதற்கான பதிலை இந்தச் சமூகம் தருவதில்தான் இருக்கிறது… அதாவது, ஓராயிரம் சத்தியவாணிகள் உருவாவதில்!
-பிருந்தா சேது