தமிழகத்தில் செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க புதிய வழிகாட்டு விதிமுறைகள் அறிவித்ததோடு தலைமைச் செயலாளர் தலைமையில் புதிய கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் “சிறுபான்மை நலன், உயர்கல்வி, பள்ளி கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் ஆகிய ஏழு துறைகளின் செயலாளர்கள் உள்ளடக்கிய தலைமைச் செயலாளர் தலைமையிலான சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியில் சிறுபான்மையினர் நல இயக்குனர் உறுப்பினர்களின் செயலாளராக பணியாற்றுவதோடு கமிட்டி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டி விண்ணப்பங்களை பரிசீலனை செய்து சிறுபான்மை அந்தஸ்து வழங்க பரிந்துரைக்கும்.
ஒருமுறை பரிந்துரைத்து விட்டால் அந்த நிறுவனத்திற்கு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ் வழங்கலாம். மொழி மற்றும் மத சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் செயல்படுவதாக இருக்க வேண்டும்.
அந்த நிறுவனம் சிறுபான்மையினரால் துவங்கப்பட்டு சிறுபான்மையினரால் நிர்வகிக்கப்பட வேண்டும். சிறுபான்மை பிரிவு சேராதவர் துவங்கிய நிறுவனத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கக்கூடாது. நிர்வாக குழுவின் அனைத்து நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
சுயநிதி சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீதத்திற்குள் சிறுபான்மை மாணவர்களையும் மீதம் பொது மதிப்பெண் தரவரிசை பட்டியல் அடிப்படையில் சேர்க்கை நடைபெற வேண்டும்.
பள்ளிகள் கல்லூரிகள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் வேளாண் சட்டம் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனரகம் பொறுப்பு அலுவலகமாக செயல்படும்.
அனைத்து சிறுபான்மையின நிறுவனங்களிலும் ஆன்லைன் வழி விண்ணப்ப முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள தகவல்களின் உண்மை தன்மை அறிய கள ஆய்வு செய்வது கட்டாயம்” என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.