சென்னை: பாஜகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவி்ல் இணைந்த நிலையில், ஆள்சேர்ப்பு விவகாரத்தில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் உரு வாகியுள்ளது.
பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கடந்த சில தினங்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகினார். அன்றே, இடைக்கால பொதுச்செயலாளர்பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மேலும் சிலர் இணைந்தனர்: இதைத்தொடர்ந்து, சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள பழனிசாமி இல்லத்தில், பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநில முன்னாள் செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பி.திலீப்கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு (எ) ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் டி.விஜய் ஆகியோர் அக்கட்சியில் இருந்து நேற்று விலகி, தங்களை அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த இணைப்பு அனைத்தும் நிர்மல்குமாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அதேபோல், ஆளுங்கட்சியான திமுகவில் இருந்து, திருத்தணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கதனம் விலகி, அதிமுகவில் இணைந்தார்.
இ்ந்நிலையில், நேற்று சென்னைவிமான நிலையத்தில் செய்தியாளர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்போது அவரிடம் ,கட்சியில் இருந்துவிலகி அதிமுகவில் இணைந்து வருபவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது:
பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது: கட்சியில் இருப்பவர்கள் விலகினால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். திராவிட கட்சிகளைச் சார்ந்துதான் பாஜக வளரும் என்ற குற்றச்சாட்டு இருந்தது. தற்போது பாஜகவில் இருந்துஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும்என்ற நிலை உருவாகி உள்ளது.இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது. யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை உள்ளவர்கள் இங்கு இருப்பார்கள்.
பாஜகவில் இருப்பவர்களை சேர்த்து தான் பெரிய கட்சி எனகாட்ட வேண்டுமா, அந்த நிலைமைக்கு உங்கள் கட்சி வந்து விட்டதா என மக்கள் நினைக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. அதற்கான நேரமும், காலமும் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்ப்பு போஸ்டர்கள்: இதற்கிடையே, பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து கோவில்பட்டி பகுதி முழுவதும் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே மாவட்டஇளைஞரணி தலைவர் தினேஷ்ரோடி தலைமையில் நேற்று மாலைபோராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியின் உருவப்படம் எரிக்கப்பட்டது.
இந்த சூழலில், அதிமுகவினரும் அண்ணாமலையின் பேட்டிக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், ‘‘நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கி வந்த நிலையில் 2021-ல் பாஜக எப்படி எம்எல்ஏக்களை வென்றது என்பதே இதற்கான பதில். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க, அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகைப்புக்குரியது’’ என்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
எதிர்பார்த்தது நடந்தால் நல்லது: கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச்சேர்ந்த ஆர்.எம்.பாபுமுருகவேல் ஒருபடி மேலே போய், ‘‘முதிர்ச்சி இல்லாத அரைவேக்காடுகளின் அரசியல் இப்படித்தான் இருக்கும்.தவறான வார்த்தை கையாடல்களும் உருவபொம்மை எரித்தலும்.
இது தொடர்ந்து நாங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்தது நடந்தால் நல்லதுதான்’’ என தெரிவித்துள்ளார். இதுபோன்ற, கருத்து மோதல்கள் அதிமுக – பாஜக இடையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.