அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
மக்களுக்கு குறைந்த செலவில், பொது போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து, அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கதல்ல; இந்த முடிவை, அரசு கைவிட வேண்டும். போக்குவரத்து துறையில் புரையோடி இருக்கும் முறைகேடுகளை களையெடுத்து, லாப நோக்கில் போக்குவரத்து துறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசு உடனடி யாக எடுக்க வேண்டும்.
தி.மு.க.,வினர் சிலரை பஸ் முதலாளிகளாக்கி அழகு பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்களோ?
காங்கிரசை சேர்ந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி:
இரண்டு தினங்களுக்கு முன், கர்நாடகாவில் பா.ஜ., – எம்.எல்.ஏ., அலுவலகத்தில், 8 கோடி ரூபாயை லோக் ஆயுக்தா கைப்பற்றி உள்ளது. அந்த எம்.எல்.ஏ.,வின் மகன், 45 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது.
சமீபத்துல சத்தீஸ்கர்ல காங்., கட்சி மாநாடு நடந்துச்சே… இவரும் கூட போயிருப்பார்… அதற்கான செலவுகளை, அந்த மாநில ஆளுங்கட்சியான காங்கிரசார், எப்படி சமாளிச்சாங்களாம்?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அறிக்கை:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வெற்றி, திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என, முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். மக்களை அடைத்து வைத்து, ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களை, வேலைக்காரர்களாக ஆக்கியது தான் திராவிட மாடலா? உங்கள் கொள்கைக்கு கிடைத்த வெற்றி அல்ல; அது, கொலுசுக்கு கிடைத்த வெற்றி.
உண்மை தான்… அதே மாதிரி வெள்ளி கிண்ணமும், விளக்கும் கொடுத்ததால் தானே, உங்க கட்சிக்கும், ‘டிபாசிட்’டே தேறியது!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:
மாநகரங்களில் போதுமான அளவு பஸ் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, ஆட்சியாளர்கள் தனியாரை தேடி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. மும்பை, பெங்களூரு மாநகரங்களில், ஒப்பந்த முறையில் தனியார் பஸ்களை இயக்கும் நடைமுறை தோல்வி அடைந்து உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் நலன் கருதி, அரசு போக்குவரத்து கழகத்தை, தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, அரசு உடனே கைவிட வேண்டும்.
பெங்களூரு ஜெயில்ல இருந்தப்ப, அந்த மாநகரின் போக்குவரத்து விவகாரங்களை தெரிஞ்சி வச்சிருக்கீங்க போல!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்