ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்ததாக வெளியான தகவலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான அரசு அறிவிப்பாணையில், ஒரு வீடு அல்லது குடியிருப்பில் ஒரு மின்சார இணைப்பு மட்டும் தான் தரப்பட வேண்டும் என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவை ஒரே இணைப்பாக இணைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், “ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 விழுக்காட்டிற்கு மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரு நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 09-ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை இணைக்கவேண்டும் என உத்தரவு பிறக்கப்பட்டிருந்த போதிலும், அதனை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதுதொடர்பாக எந்தவொரு செயல் உத்தரவும் தற்போது பிறப்பிக்கப்படவில்லை என்றும், இதுகுறித்த கடித வரைவை வெளியிட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
newstm.in