சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராகப் பதவி வகித்த சிடிஆர்.நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்தார். பாஜக, அதிமுகவிடையே கூட்டணி உள்ள நிலையில், பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி, அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேட்டி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்துக்கொண்டு வெளியே வரத்தான் செய்வார்கள். நானும் அந்த மாதிரி தலைவர்தான் தலைவர் என்ற முறையில் பயம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பேன். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். அரசியல் கட்சி அப்படித்தான் வளர முடியும். எந்த நிலையிலும் பாஜகவின் வேகம் குறையாது. நான் இருக்கும் வரை கட்சி இப்படித்தான் இருக்கும். எம்பி, எம்எல்ஏ, முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கவே வந்துள்ளேன்” என்று அண்ணாமலை கூறினார்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் இடைத்தேர்தல் தோல்வி, அதிமுக – பாஜக கூட்டணி, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.