இஸ்லாமாபாத்:’என் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, நான் படுகொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’ என, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் வாயிலாக வேண்டுகள் விடுத்து உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்த போது, பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் அவருக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை அளித்தனர்.
அந்த பரிசுப் பொருட்களை அந்நாட்டு சட்டப்படி, ‘தோஷாகானா’ எனப்படும் கருவூலத்தில் அவர் ஒப்படைக்க வேண்டும்.
குற்றச்சாட்டு
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பரிசுப் பொருட்களை இம்ரான் கான் விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். தேர்தலின் போது அந்த பரிசுப் பொருட்களை தன் சொத்துக் கணக்கில் இருந்து இம்ரான் கான் மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு பாக்., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி இம்ரான் கானுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இதனால் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரன்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது.
இதையடுத்து இம்ரான் கானை கைது செய்ய, இஸ்லாமாபாத் போலீசார் லாகூருக்கு 5ம் தேதி சென்றனர். ஆனால், அங்குள்ள வீட்டில் இம்ரான் கான் இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், பாக்., உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அட்டா மண்டியாலுக்கு கடிதம் ஒன்றை இம்ரான் கான் எழுதி உள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது:
என்னை ஆட்சியில் இருந்து நீக்கி புதிய அரசு பொறுப்பேற்றவுடன், என் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நான் மிரட்டப்பட்டதுடன், என்னை கொல்வதற்காக தாக்குதலும் நடத்தப்பட்டது.
‘நோட்டீஸ்’
என் மீதான கொலை முயற்சியில் பாக்., பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நேரடி தொடர்பு உள்ளது. நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சியான பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் தலைவரான என் மீது 74 வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைகளில் ஆஜராக தொடர்ந்து, ‘நோட்டீஸ்’ அனுப்பப்படுகின்றன.
நான் போகும் இடமெல்லாம் என் கட்சிக் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிகின்றனர். ஆனால் எனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. என் மீது மேலும் ஒரு தாக்குதல் நடத்தி என்னை கொலை செய்ய முயற்சிகள் நடக்கிறது.
அரசியலமைப்பின் கீழ் வாழ்வதற்கான உரிமையை கோர அனைவருக்கும் உரிமை உள்ளது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்