அதர்தலா: தொடர்ந்து இரண்டாவது முறையாக திரிபுரா மாநில முதல்வராக டாக்டர் மாணிக் சாஹா இன்று (மார்ச் 8) பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
புதன்கிழமை அகர்தலாவில் நடந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஸ்ஸாம் முதல்வர் ஹேம்ந்த பிஸ்வா சர்மாவும் கலந்து கொண்டார்.
சமீபத்தில் திரிபுராவின் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. உள்ளூர் கட்சியான திப்ரா மோதா, 13 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக முன்னேறியுள்ளது.
முன்னதாக, திங்கள்கிழமை நடந்த பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் முதல்வராக மாணிக் சாஹா பெயர் முன்மொழியப்பட்டத்தைத் தொடர்ந்து அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து அகர்தலாவிலுள்ள விவேகானந்தா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் அமைச்சர்களாக ரத்தன் லால் நாத், பிரஞ்சித் சிங்க ராய், சந்தான சக்மா, சுசானந்த சவுத்ரி, டிங்கு ராய், பிகாஸ் டெப்பர்மா, சுதாங்சு தாஸ், சுக்லா சரண் நோட்டியா ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். முதல் நான்கு பேர் முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள். அடுத்த மூன்று பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டியிலிருந்து ஒருவர் அமைச்சர் பதவி ஏற்றுள்ளார்.
பல் மருத்துவரான மாணிக் சாஹா, மாநிலத்தில் தேர்தல் நடக்க இருந்த சில மாதங்களுக்கு முன்பாக கடந்த 2022ம் ஆண்டு பிப்லப் டெப்-க்கு பதிலாக திரிபுராவின் முதல்வராக்கப்பட்டார். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பார்டோவாலி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக அவர் வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட்டிருக்கவில்லை. இந்த தேர்தலிலும் அந்த தொகுதியை மாணிக் சாஹா தக்கவைத்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மாணிக் சாஹா தொடர்ந்து பாஜகவில் இணைந்தார். 2022-ம் ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.