பாகிஸ்தானில் பயங்கரவாதம்: 10 ஆண்டுகளில் 400 வீரர்கள் உள்பட 84 ஆயிரம் பேர் பலி

கராச்சி,

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களால் பொதுமக்கள், வீரர்கள் உள்பட பலர் மரணம் அடைவது அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டில், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது.

எனினும், டி.டி.பி. அமைப்பு கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களால் பாதுகாப்பு படையினர், போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் என 400 வீரர்கள் வரை மரணம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் டான் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை அடிப்படையாக கொண்டு டைம்ஸ் ஆப் இஸ்ரேல் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், இந்த எண்ணிக்கையானது, ராணுவம் மற்றும் போலீசார் என அதிக பாதுகாப்பு நிறைந்த இடங்களில் நடந்த மரணங்களையே குறிக்கும். பிற பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை பற்றி குறிப்பிடப்படவில்லை.

பாகிஸ்தானில், அகமதியர்கள் எனப்படும் சிறுபான்மையினர் அந்நாட்டு அரசியல் சாசனத்தின்படி, இஸ்லாமியர்கள் அல்ல என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் உள்பட சிறுபான்மை இனத்தவர் வழிபாட்டுக்கு பயன்படுத்த கூடிய மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்ற்ம் பிற பகுதிகளில் நடந்த தாக்குதல்கள் இந்த கணக்கில் கொள்ளப்படவில்லை.

2016-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி பெஷாவர் நகரில் ராணுவ பொது பள்ளியில் டி.டி.பி. அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 174 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் குழந்தைகள் ஆவர். இந்த எண்ணிக்கையும் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

இதேபோன்று, பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களால் 84 ஆயிரம் மக்கள் உயிரிழப்பு என்று பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்திய தகவலையும் டைம்ஸ் ஆப் இஸ்ரேல் வெளியிட்ட தகவல் கணக்கில் கொள்ளவில்லை.

இந்த 10 ஆண்டு காலத்தில், சன்னி பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, லஷ்கர்-இ-ஜாங்வி, சிபா-இ-சஹாபா மற்றும் பல்வேறு பெயர்களால் இயங்கி வரும் மற்றும் அரசின் தடையால் தங்களது பெயர்களை அடிக்கடி மாற்றி கொள்ளும் அமைப்புகளால் உள்ளூரில் நடத்தப்படும் தாக்குதல்களும் கணக்கில் கொள்ளப்படவில்லை.

இந்த டி.டி.பி. அமைப்பு மற்றவற்றுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானில் பெரிய பயங்கரவாத அமைப்பு ஆகும். பல பயங்கரவாத அமைப்புகள் அல்-கொய்தா அல்லது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவை என பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்தில் கடந்த ஜனவரியில் பெஷாவர் நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயரதிகாரிகள், போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தேவை என பல நாடுகளும் கோரி வரும் சூழலில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.