“நான் இதைப் பேசியதற்கு வெட்கப்படவில்லை, குற்றவாளிகள்தான் வெட்கப்பட வேண்டும்" – குஷ்பு விளக்கம்

நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அண்மையில் ‘We The Women ‘என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குஷ்பு, பத்திரிகையாளர் பர்கா தத் உடனான உரையாடலின்போது, “எனக்கு எட்டு வயது இருக்கும்போது என் அப்பாவால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன். ஆனால் அவருக்கு எதிராக என்னால் பேசமுடியவில்லை. இதை வெளியில் சொன்னால் என் அம்மாவும் என்னை நம்பவில்லை எனில் என்ன செய்வது, இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் பிரச்னை வருமோ என்ற அச்சம் என்னுள் இருந்தது. `கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற மனப்பான்மையிலேயே என் அம்மா வாழ்ந்து வந்தார்.

இனியும் தாங்க முடியாது என முடிவு செய்து என் 15 வயதில் அப்பாவுக்கு எதிராகப் பேசத் தொடங்கினேன். எனக்கு16 வயதுகூட இருக்காது. அதற்குள் அவர் எங்களை விட்டுச் சென்றார். அடுத்த வேளை உணவுக்குக்கூட என்ன செய்வது எனத் தெரியாமல் நாங்கள் தவித்தோம். என் குழந்தைப் பருவம் மிக மோசமானதாகப் பல பிரச்னைகளைக் கொண்டதாக இருந்துள்ளது. ஆனாலும் கூடவே நான் அதை எதிர்த்துப் போராடும் தைரியமும் நம்பிக்கையும் பெற்றேன்” என்று 8 வயதில் தன் அப்பாவால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

குஷ்பு

குஷ்புவின் இந்தப் பேச்சு பெரும் பேசுபொருளாகியிருந்தது. இதுபற்றி பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு பேசியதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார் குஷ்பு, “அதிர்ச்சியளிக்கும் வகையில் நான் ஒன்றும் பேசவில்லை. நேர்மையுடன் நான் அதை வெளிப்படுத்தினேன். நான் இதைப் பேசியதற்கு வெட்கப்படவில்லை. ஏனென்றால் இது எனக்கு நடந்துள்ளது. குற்றவாளிகள்தான் இதுபோன்று செய்ததற்காக வெட்கப்பட வேண்டும். நீங்கள் வலிமையாகவும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எதுவும் உங்கள் மனதை உடைந்துபோகச் செய்துவிடக் கூடாது, இதுதான் முடிவு என்று நினைத்துவிடக் கூடாது என்ற செய்தியை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதைப்பற்றி பேசினேன். இதைப் பற்றி வெளிபடையாகப் பேசுவதற்கு நான் இத்தனை வருடங்கள் எடுத்துக் கோண்டேன். ‘இதுதான் எனக்கு நேர்ந்தது, என்ன நடந்தாலும் நான் உடைந்துபோய் உட்கார மாட்டேன், என் பயணத்தைத் தொடர்வேன்’ எனப் பெண்கள் இதைப் பற்றி பேச தைரியமாக முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.