தள்ளாடும் கோவை; வண்டி ஏறிய வட மாநில தொழிலாளர்கள்… நிறுவனங்கள் தவிப்பு!

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என வதந்தி கிளம்ப பெரும் அச்சம் ஏற்பட்டது. இதில் கட்சிகள் ஒருபுறம் அரசியல் செய்ய, மறுபுறம் தொழிலாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்களை வேறு விதமாக கதை கட்டி விட்டுள்ளனர். இதுதொடர்பாக வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவின.

வட மாநில தொழிலாளர்கள் வெளியேற்றம்

ஆனால் அப்படி எதுவும் இல்லை. விரைவில் திரும்பி விடுவோம் என்று நம்பிக்கை அளித்து விட்டு சென்றுள்ளனர். இந்த சூழலில் கோவையில் இருந்து 45 சதவீத வட மாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை மற்றும் வதந்திகளால் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது.

கோவை நிலவரம்

இது கோவையில் உள்ள நிறுவனங்கள் இயங்க முடியாமல் பெரிதும் ஆட்டம் காணச் செய்துள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் மட்டும் பல்வேறு தொழில்களில் தோராயமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

5 லட்சம் தொழிலாளர்கள்

இவர்களில் சுமார் பாதி பேர் தற்போது கோவையில் இல்லை எனத் தெரிகிறது. இதனால் ஜாப் ஆர்டர்களை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இதுபற்றி கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்க (காட்மா) பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறுகையில், கோவையில் உள்ள பவுண்டரிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பஞ்சாலைகள், பெரிய நிறுவனங்கள் என பல்வேறு தொழில்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பாதி பேர் குட்பை

இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கும் மற்றும் வதந்திகளை நம்பியும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் ஏற்கனவே பெற்றிருந்த ஜாப் ஆர்டர்களை குறித்த நேரத்திற்குள் செய்து கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. கொரோனா, ஜி.எஸ்.டி, உலக பொருளாதார மந்த நிலை என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழில் முனைவோர்கள் தொழில்களை நடத்தி வருகின்றனர்.

தவிக்கும் ஜாப் ஆர்டர்கள்

கடந்த ஆறு மாத காலமாக தான் தொழில் சற்று மேம்பட்டு வந்தது. ஹோலி பண்டிகை கொண்டாட வழக்கமாக 20 சதவீத வட மாநில தொழிலாளர்கள் மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அதுவும் இரண்டு மாதத்திற்கு முன்னரே சொல்லிவிடுவர். அதற்கு ஏற்ப ஜாப் ஆர்டர்கள் பெறப்பட்டு பணிகளை கோவை தொழில் முனைவோர்கள் மேற்கொள்வார்கள்.

பாதிக்கப்படும் பொருளாதாரம்

தற்போது கூடுதலாக 25 சதவீதம் வெளியேறியுள்ளனர். தொடர்ந்து பலரும் வெளியேறி கொண்டே இருக்கின்றனர். அவர்கள் 10 நாட்களில் திரும்பி வந்துவிட்டால் நிலைமையை சற்று சமாளிக்கலாம். நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்து கொண்டால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே பாதிக்கும். தற்போது கோவையில் உள்ல தொழில் நிறுவனங்கள் தள்ளாட்டத்தை சந்தித்து வருவதாக செல்வராஜ் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.