சேலம்: ஓமலூர் வெங்காய மண்டிகளுக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது விலை குறைந்து கிலோ எட்டு ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார பகுதிகளில் வெங்காய மண்டிகள் உள்ளன. இங்குள்ள வெங்காய மண்டிகள் மற்றும் சேலம் வெங்காய மார்க்கெட்டிற்கு தற்போது பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் இருந்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் பெரிய வெங்காயம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால், அங்கு பெரிய வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து சரிந்தது. அதனால், கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக வடமாநிலங்களில் பெரிய வெங்காயம் அறுவடை அதிகரித்துள்ளது. இதனால், அங்கிருந்து சேலம், ஓமலூர் மார்க்கெட்டுக்கு தினமும் 250 டன் வரை பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மொத்த விலையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 5 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இங்கு விற்பனைக்கு வரும் வெங்காயத்தை சில்லறை வியாபாரிகள் வாங்கி சென்று கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர்.
தற்போது வரத்து அதிகரிப்பால் கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் பெரிய வெங்காயம் 20 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது கிலோ எட்டு ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது. தற்போது பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.