தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக கடந்த 2021 ஆகஸ்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் விஜயகாந்த் மீது போடபப்ட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெற சிறப்பு நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களின் அனுமதியை பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி நகர குற்றவியல் வழக்கறிஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விஜயகாந்த் மீதான வழக்கு நிதி சம்பந்தப்பட்டது அல்ல எனவும், அவதூறு வழக்கு என்பதால் அதை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என மாநில அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டனர்.