கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நடனப்பெண் மீது பணமழை பொழியும் வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் வருகிற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளதால், தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பாஜகவின் முக்கிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பொதுக்கூட்டங்கள், மக்கள் பேரணி உள்ளிட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஆனால் 5 ஆண்டுகால ஆட்சி முடிவதற்குள், ஆளும் அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதால், பாஜக ஆட்சி அமைத்தது. இந்தநிலையில் வரப்போகிற சட்டப்பேரவை தேர்தலிலும் தொங்கு சட்டசபை அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. அது பாஜக இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பாஜக சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காங்கிரஸுக்கு எதிராக அரசியல் செய்ய பாஜகவிற்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும் பெண்ணின் மீது பணமழை பொழிந்தபோது எடுத்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹூப்ளியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் சிவசங்கர் ஹம்பன்னா, நடனமாடும் பெண்ணின் அருகில் நடனமாடுவதும், அவர் மீது பணத்தை வீசுவதும் வீடியோவில் காணப்படுகிறது. கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் திருமணத்தின் ஒரு பகுதியாக ஹல்தி விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த வீடியோவுக்கு பதிலளித்துள்ள கர்நாடக பாஜக பொதுச் செயலாளர் மகேஷ் தெங்கிங்காய், ‘‘இது வெட்கக்கேடானது, அந்த வீடியோவை டிவியில் பார்த்தேன். ஒரு பெண் நடனமாடுகிறாள், அவள் மீது பணம் வீசப்படுகிறது. இவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாது, இதுபோன்ற நிகழ்வுகள் காங்கிரஸின் கலாச்சாரம் என்ன என்பதைக் காட்டுகிறது, அதை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். இதைக் கண்டித்து, காங்கிரஸ் இதைப் பரிசீலிக்க வேண்டும்” என்று தெங்கிங்காய் கூறினார்.
பாஜக செய்தி தொடர்பாளர் ரவி நாயக்கும் காங்கிரஸை கடுமையாக சாடினார், “இந்த சிறுமிகளுக்கு அவர் என்ன மரியாதை கொடுக்கிறார் என்பது எனது ஒரே கேள்வி. இது காங்கிரஸுக்கு மட்டுமே உள்ள கலாச்சாரம் போல உணர்கிறது. ஏனென்றால் திருமண இடத்தில் பெண்களை தூக்கி எறியும் கலாச்சாரம். காங்கிரஸால் மட்டுமே விளக்க முடியும்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இப்படி நடந்து கொள்வது முற்றிலும் தவறானது. காங்கிரஸ் தொண்டர் உடனடியாக அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இந்த சம்பவம் பெண்களுக்கு முற்றிலும் அவமரியாதை’’ என்று அவர் கூறினார்.