சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத் தலைவர்களாக உள்ள பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது என்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்பதாக தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.பெரியசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பாஜக ஒன்றிய அரசின் வஞ்சக செயலைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று (பிப்.7) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 2.74 லட்சம் கோடி நிதியொதுக்கம் செய்ய வேண்டும், ஆண்டுக்கு நூறு நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 600 வழங்க வேண்டும், கண்ணியமான, சுயமரியாதை கொண்ட வாழ்க்கை அமைய, வீடில்லாத குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் முழுமானிய நிதி உதவி வழங்க வேண்டும்.பட்டியல் சாதியினர், பழங்குடியினர் இளைய தலைமுறையினர் தொழில் தொடங்க குடும்பத்துக்கு தலா ரூ 10 லட்சம் முழு மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மார்ச் 8 சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக் கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத் தலைவர்களாக உள்ள பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது” என்று அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் நன்றி பாராட்டி. வரவேற்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துச் செய்தியில், மகளிருக்கு எதிரான வன்முறைகள், குற்றங்களை ஒழிப்பது, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சம உரிமையை நிலைநாட்டுவது ஆகிய உயர் லட்சியங்களை அடைவதற்கு “தமிழ்நாடு அரசின் மகளிருக்கான புதிய கொள்கை”யும் விரைவில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. அதன் வழியாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத்தலைவர்களாக உள்ள பெண்களுக்குக் கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது என அரசு திட்டமிட்டுள்ளது என்று அறிவித்திருந்தார்.