கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள முன்னூர் மோளப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மரகதவள்ளி, கல்யாண மரகதீஸ்வரர் மற்றும் உத்தண்ட வேலாயுதசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாதாமாதம் அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
மேலும், ஆண்டுதோறும் மாசிமகத் திருவீதிஉலா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டும் மாசிமகத் திருவீதி உலா நடந்தது. கடந்த 5-ம் தேதி இரவு 8 மணிக்கு மோளப்பாளையத்திலிருந்து கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். அன்று இரவு காவிரித் தீர்த்தம் மூலம் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்றது.
நேற்று காலை 11 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி பல்லகில் மோளப்பாளையம் ஊருக்குள் திருவீதி உலா கண்டருளினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையில், காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரை இடைவிடாது அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கரூர் இந்து சமய அறநிலையத்துறை தக்கார் ஹேமலதா மற்றும் முன்னூர், குப்பம், க.பரமத்தி, நெடுங்கூர் ஆரியூர், இலக்கமநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி மற்றும் பூந்தளிர் நற்பணி மன்றத்தினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.