ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் அரசுப் பணிகளுக்கான தேர்வு நடத்த, கறுப்புப் பட்டியலில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்த, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, ‘ஏப்டெக்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு கடந்தாண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் கறுப்புப் பட்டியலில் உள்ள அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு – காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் இளைஞர்கள் திடீரென நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
இதைக் கலைக்க போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, போலீசார் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
இது ஜம்மு – காஷ்மீரில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதால், வெளிப்படையான நிர்வாகம் கிடைக்கும் என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், மோசடிகள் நடந்ததாக பல ஆள்சேர்ப்பு முகாம்கள், தேர்வு முடிவுகள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சப் – இன்ஸ்பெக்டர் பதவிக்காக ௧,௨௦௦ பேர், இளநிலை இன்ஜினியர் பதவிக்காக ௧,௩௦௦ பேர் மற்றும் கணக்கு பிரிவுகளில் பணியாற்ற ௧,௦௦௦ பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
அதையடுத்து, இந்த தேர்வு பட்டியல்களை ரத்து செய்து துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கடந்தாண்டு உத்தரவிட்டார்.
மேலும் இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப் பணி வாங்கித் தருவதாக, ௨௦ – ௩௦ லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று, பணம் தந்தவர்கள் தேர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தும் ஒப்பந்தம், ஏப்டெக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பலர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது, ஜம்மு – காஷ்மீர் நிர்வாகத்துக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
எம்.பி.பி.எஸ்., இடங்கள் விற்பனை
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பில் சேருவதற்கான இடங்கள், ஜம்மு – காஷ்மீர் மாணவர்களுக்கு விற்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.இதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹுரியத் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்