தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திலுள்ள அமானி மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் பாலக்கோடு சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து வரும், 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்; 45 ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்தப் பள்ளி மாணவர்கள், சில மாணவிகள், வகுப்பறையிலுள்ள, மேஜை, நாற்காலிகளை கட்டை, குச்சிகளால் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, சம்பவம் குறித்து விசாரிக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இன்று மேஜை நாற்காலிகளை அடித்து நொறுக்கிய மாணவ, மாணவியர் ஐந்து பேரை, மாவட்ட கல்வித்துறை, ஐந்து நாள்களுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல், பள்ளி வளாகத்தில் இவ்வாறான சம்பவம் நடக்க அனுமதித்தது தொடர்பாகவும், மேஜை, நாற்காலிகள் சேதமடைந்தது தொடர்பாகவும் விளக்கம் அளிக்குமாறு, பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துச்சாமி மற்றும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு!
இந்தச் சம்பவம் தொடர்பாக நிருபர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “பள்ளியில் நாமெல்லாம் தேர்வு முடிந்தால், இங்க் தெளித்து விளையாடுவது வழக்கம். ஆனால், தருமபுரியில் மாணவர்கள் மேஜை, நாற்காலிகளை உடைத்து விளையாடியிருக்கின்றனர்.
அவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறியிருக்கிறோம். இந்த மாணவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், அவர்களின் எதிர்காலம் பாதிக்குமென்பதால், எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், மற்ற மாணவர்களுக்கு பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தக் கூடாது என்றும், பொதுச்சொத்துகள் பாதுகாப்புச் சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது’’ என்றார்.