புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கவுஷிக் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சதீஷ் கவுஷிக், டெல்லியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருந்தபோது, நேற்று அதிகாலையில் உடல் நலம் பாதித்தது. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில், அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 67. இந்த தகவலை அவரது நெருங்கிய நண்பரான நடிகர் அனுபம் கெர் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத் இயக்கி நடித்து முடித்துள்ள, எமர்ஜென்சி என்ற படத்தில் இறுதியாக சதீஷ் நடித்துள்ளார். அவரது மரணம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் விடுத்துள்ள இரங்கல் பதிவில், ‘இந்த மோசமான செய்தியுடன் தான் கண் விழித்துள்ளேன். அவர் எனது மிகப்பெரிய லீடர். தனிப்பட்ட முறையில் மிகவும் அன்பான மற்றும் உண்மையான மனிதர். எமர்ஜென்சியில் அவரை இயக்குவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். மறைந்த சதீஷ் கவுஷிக், சல்மான் கான் நடிப்பில் தேரே நாம் (தமிழில் சேது) படத்தை இயக்கியவர். 1956ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி அரியானாவில் பிறந்தார்.
நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். மேடை நாடகம், சினிமா, சின்னத்திரை, வெப்சீரிஸ் என தான் நுழைந்த அனைத்து துறைகளிலும் தடம் பதித்தவர். இவர் 1987ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘மிஸ்டர் இந்தியா’ மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமடைந்தார். அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சதீஷ் கவுஷிக்குக்கு தொடர்ந்து பாலிவுட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.