கும்பகோணம்: கும்பகோணத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி மேற்கொள்ளுவதற்கு தினந்தோறும் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கும்பகோணம் வட்டம், கடிச்சம்பாடி, தேவனாஞ்சேரி, அகராத்தூர், திருப்புறம்பியம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு தோறும் முன்பட்ட குறுவை சாகுபடி மேற்கொள்வது வழக்கம். அதன்படி நடப்பாண்டு மின் மோட்டார் தண்ணீரைக் கொண்டு வயல்களை உழுது, விதை தெளித்துள்ளனர். 30 நாட்களுக்கு பிறகு நாற்றுக்களைப் பறித்து நடவு மேற்கொண்டு, ஜூன் மாதத்தில் அறுவடை மேற்கொள்வார்கள். இந்நிலையில், இக்கிராமங்களில் தற்போது விவசாயித்திற்கான மின்சாரம் 12 மணி நேரம் மட்டும் வழங்குவதால், நாற்றாங்காலுக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், இக்கிராமங்களில் சாகுபடி செய்யும் முன்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தினந்தோறும் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து கடிச்சம்பாடியைச் சேர்ந்த ஆர்.ஜெ.வெங்கட்ராமன் கூறியது: “கடிச்சம்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டு தோறும் 3 போகம் நெற் பயிர் சாகுபடி ஆறுகள் மற்றும் மின்மோட்டார் தண்ணீர் மூலம் செய்து வருகின்றோம்.
கடந்தாண்டுகளில் முன்பட்ட குறுவை சாகுபடிக்கு போதுமான அளவில் மின்சாரம் வழங்கிய நிலையில், நடப்பாண்டில் அண்மைக்காலமாகக் காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி என 12 மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் வழங்குகிறார்கள். கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் பகலில் வெயில் அடிப்பதால், நாற்றாங்காலுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மின்சார வாரிய அதிகாரிகளிடம், தினந்தோறும் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் மனு அளித்து வலியுறுத்தியுள்ளோம். அவர்களும் நடவடிக்கை மேற்கொள்கிறேன் என உத்தரவாதம் அளித்துள்ளார்கள்.
எனவே, மின் மோட்டாரை நம்பி முன் பட்ட குறுவை சாகுபடி தொடங்கியுள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுத் தினந்தோறும் 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்