தமிழகத்தில் நான்கு மிதக்கும் கப்பல் தளம்: ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி:  தமிழ்நாட்டில்  கூடுதலாக நான்கு மிதக்கும் கப்பல் தளத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.  ஒன்றிய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தரைகளை அமைப்பதற்குப் பதிலாக மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மிதக்கும் இறங்கு தளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும், நவீனத்துவம் மிக்கதாகவும் நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் உள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலாக தமிழ்நாட்டில் நான்கு மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவின் ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்பட உள்ளன. மேலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய இடங்களிலும் இந்த இறங்கு தளங்கள் அமைய உள்ளது.  இதைத்தவிர கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க ஒன்றிய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறுகையில்,‘‘வலுவான இணைப்புகளை வழங்குவதற்கு பிரதமர் உயர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இது இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மிதவை இறங்கு தளங்களை அமைப்பது, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் வழிவகுப்பதுடன் நீர் தொடர்பான சுற்றுலாவுக்கு புதிய வழிகளையும் உருவாக்கும். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், அந்தப் பிராந்தியத்தின் வர்த்தகமும் அதிகரிக்கும்,’’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.