சாகர்மாலா திட்டத்தில் ராமேசுவரத்தில் 2 இடங்கள் உட்பட தமிழகத்தில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு அனுமதி

ராமேசுவரம்: மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் செய்திக் குறிப்பு: சாகர்மாலா திட்டத்தின் கீழ் தனித்துவமான மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த மிதக்கும் இறங்கு தளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும், நவீனத்துவம் மிக்கதாகவும், நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். தமிழகத்தில் 4 மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆன்மிக தலமான ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை, ராமேசுவரம் வில்லூண்டி தீர்த்தக் கடற்கரையிலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரியில் இந்த மிதவை இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் சுற்றுலாப் பயணிகள் தடையின்றியும், பாதுகாப்பாகவும் நீர்வழிப் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், மிதவை இறங்கு தளங்களை அமைப்பது, மாநிலங்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் வழிவகுப்பதுடன் நீர் தொடர்பான சுற்றுலாவுக்குப் புதிய வழிகளையும் உருவாக்கும். இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், அந்த பகுதியின் வர்த்தகமும் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

மிதக்கும் இறங்குதளம் என்பது மிதக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு கட்டப்படுகிறது. இது வலுவான, அதே நேரத்தில் பாதுகாப்பானதாகும். இவை கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியா, கோவாவில் மண்டோவி நதி, கொச்சியில் இந்திய கடற்படை தளம், கொல்கத்தாவில் ஹூக்ளி நதி, விஜயவாடாவில் பிரகாசம் தடுப்பணை, அகமதாபாத்தில் சபர்மதி நதி உள்ளிட்ட இடங்களில் இறங்குதளம் பயன்பாட்டில் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.