ஜெர்மன் தலைநகர் பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில் நடைபெற்ற பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்டது.
இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான பட்வா சர்வதேச பயண விருது சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்தார். தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்காக பாரம்பரியம் மற்றும் ஆன்மீக சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, சாகசச் சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் வனச் சுற்றுலா, மருத்துவம் மற்றும் உடல்நலம் பேணும் (Medical & Wellness) சுற்றுலா, வணிக (MICE) சுற்றுலா, கிராமிய மற்றும் மலை தோட்டப்பயிர் சுற்றுலா, கேரவன் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, உணவுச் சுற்றுலா என பத்து சுற்றுலாப் பிரிவுகளை அடையாளம் கண்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கனடா, சீனா, மலேசியா. ரஷ்யா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டிற்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்கள் தமிழ்நாட்டில் தங்கும் காலத்தை அதிகரிக்கவும் சுற்றுலாத் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் மனதை மயக்கும் நிலப்பரப்புகள், அழகிய அற்புதமான கலாச்சார பாரம்பரியம். கட்டடக்கலை, பிரமிப்பூட்டும் கடற்கரைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், பாரம்பரிய கலை வடிவங்கள். புகழ்பெற்ற கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை வீடியோக்கள் மூலம் உலகெங்கும் காட்சிப்படுத்துவதன் மூலம் தமிழகத்தை சிறந்த சுற்றுலாத் தலமாக இந்தியாவிலும் உலகெங்கிலும் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டிலிலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் விதமாக விளக்கமளிக்கும் 75 க்கும் மேற்பட்ட யூ-ட்யூப் காணொலிகள், ‘நெடிய சுற்றுலாக்களைக் கொண்ட மாநிலமாக’ தமிழ்நாட்டை உயர்த்த வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்களையும், மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இரயில் இணைப்புகளையும், மாநிலத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இணைக்கின்ற வகையிலான நன்கு மேம்படுத்தப்பட்ட சாலை கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.
சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்துவதற்காக “தமிழ்நாடு சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சுற்றுலாத்தலங்களுக்கு தொடர்ந்து வருகை தருபவர்களுக்கு புது அனுபவம் கிடைக்கும் வகையில் சாகச சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மாநிலத்தின் பல்வேறு சுற்றுலாத்தலங்களில் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய புதிய முயற்றிகளின் காரணமாக உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு ஆர்வத்துடன் வருகை தருவதுடன், இந்தியாவிற்கு வருகை தரும் பயணிகள் தமிழ்நாட்டில் கூடுதல் நாட்கள் தங்கி பார்வையிட்டு வருகின்றார்கள்.
ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் 7.03.2023 தொடங்கி 9.3.2023 வரை நடைபெற்ற சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TRAVEL BOURSE-2023) தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கம் அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகள் வீடியோ குறும்படங்கள் மூலமாகவும், கையேடுகள், மடிப்பேடுகள் மூலமாகவும் விளக்கப்பட்டு, தமிழ்நாட்டில் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ள பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டு வருகின்றார்கள். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை ஜெர்மன் மொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டு பார்வையாளர்கள், பயண ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இத்தகைய சிறப்பான முன்னெடுப்பு நடவடிக்கைகளால் ஜெர்மன் தலைநகர் பெர்லின் சர்வதேச சுற்றுலா சந்தையில் (8.3.2023) அன்று நடைபெற்ற பசிபிக் பகுதி பயண எழுத்தாளர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான பட்வா சர்வதேச பயண விருதினை ஜமைக்கா நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹெச்.இ.எட்மண்ட் பார்ட்லெட் (Mr.H.E.EDMUND BARTLETT, Minister of Tourism, Jamaica) அவர்களிடமிருந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு வழங்கப்பட்ட பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருதினை ஜமைக்கா நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஹெச்.இ.எட்மண்ட் பார்ட்லெட்டிடமிருந்து, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். பி.சந்தரமோகன் பெற்றுக் கொண்டார்.