தோடா: ஜம்மு காஷ்மீரில் மலைப்பாங்கான தோடா மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவம் 100 அடி உயர கம்பத்தை பொருத்தி உள்ளது. அதில் ராணுவத்தின் டெல்டா படையின் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் அஜய் குமார் நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (செக்டார் 9) பிரிவின் கமாண்டர் பிரிகேடியர் சமிர் கே.பலாண்டே, தோடா நகர காவல் துணை ஆணையர் விஷேஷ் பால் மகாஜன் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர் அப்துல் கயூம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த எண்ணற்ற வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தக் கொடி பறக்கவிடப்பட்டிருப்பதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நாட்டுக்காக வீரமரணம் அடைந்த சில வீரர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் பறக்கவிடப்பட்டுள்ள 2-வது மிகப்பெரிய தேசியக் கொடி இது ஆகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிஷ்ட்வார் நகருக்கு அருகே 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இப்பகுதி 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீவிரவாதத்தின் முக்கிய மையமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.