ஒன்றிய அரசாங்கம் காஷ்மீரில் மக்களிடம் ஆயுதங்களை கொடுத்து, அவர்களே அவர்களை தற்காத்து கொள்ள சொல்வதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதற்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்கள் ஒன்றிய பாஜக அரசால் கட்டுப்படுத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆளும் ஒன்றிய அரசுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டால் மிரட்டப்பட்டு, வணிகவரித்துறை ரெய்டுகள் நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.
மேலும் பல ஊடக நிறுவனங்கள் பாஜகவின் அஜெண்டாவை செய்திகளாக வெளியிடுவதாகவும், விவசாயிகள், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பொருளாதாரம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி வருகிறார். அதேபோல் இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாகவும், பாஜகவை விமர்சிக்கும் எதிர்கட்சிகள் நேரடியாக சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட எஜென்சிகளால் தொடர்ந்து மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், சமீபத்தில் வெளிட்ட செய்தி தற்போது ஒன்றிய பாஜக அரசை ஆத்திரப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசை “அடக்குமுறை ஊடகக் கொள்கைகள்”, “காஷ்மீர் ஊடக நிறுவனங்களை மிரட்டுதல்” மற்றும் ஜம்மு காஷ்மீரில் “தகவல் வெற்றிடத்தை” உருவாக்குவதாக விமர்சித்திருந்தது.
“உலகில் ராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளியில் முதன்மையில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில்,
கிராம மக்களிடம் மோடி அரசு ஆயுதங்களை கொடுத்து தங்களை தற்காத்து கொள்ள சொல்கிறது. பகலில் விவசாயிகளாகவும், எலக்ட்ரீசியன், மெக்கானிக் என பல வேலைகளை செய்து வரும் மக்கள், இரவில் துப்பாக்கி ஏந்தி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களே தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்றால் அங்கு ராணுவம் எதற்கு.? மத்தியில் வலதுசாரி பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. அதேபோல் இண்டர்நெட்டை கட்டுப்படுத்துதல், ஊடகங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளால் காஷ்மீரில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது.
காஷ்மீர் மாதிரியான தகவல் கட்டுப்பாட்டை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகப்படுத்துவதில் மோடி வெற்றி பெற்றால், அது பத்திரிகை சுதந்திரம் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தையே ஆபத்திற்கு தள்ளிவிடும்” என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் கட்டுரைக்கு பதிலளித்த ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்த அமெரிக்க செய்தி நிறுவனத்தின் கருத்து கற்பனையானது. இந்தியா மற்றும் அதன் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் மதிப்புகள் பற்றி எதிர் பிரச்சாரத்தை பரப்புவதற்கான ஒரே நோக்கத்துடன் வெளியிடப்பட்டது.
இந்தியா மீதும் நமது பிரதமர் நரேந்திர மோடி மீதும் வெறுப்பை வளர்க்கும் சில வெளிநாட்டு ஊடகங்கள், நமது ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவ சமூகம் குறித்து நீண்ட காலமாக திட்டமிட்டு பொய்களை பரப்ப முயற்சித்து வருகின்றன. இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மற்ற அடிப்படை உரிமைகளைப் போலவே புனிதமானது.
திரிபுராவில் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகிறார் மாணிக் சாகா.!
இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் மக்களாகிய நாமும் மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளோம். இதுபோன்ற நிகழ்ச்சி நிரல் சார்ந்த ஊடகங்களில் இருந்து ஜனநாயகத்தின் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறித்து பரப்பபடும் அப்பட்டமான பொய்கள் கண்டிக்கத்தக்கது. இந்தியர்கள் அத்தகைய மனநிலையை அனுமதிக்க மாட்டார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.