“சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” – வீடியோவை பதிவிட்டு பிரசாந்த் கிஷோர் கேள்வி

பாட்னா: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது” என்று பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ‘நாம் தமிழர்’ பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் பேசிய வீடியோ ஒன்றை பகிந்துள்ளார். அதில், “வட இந்தியர்களைப் பிடித்து அடித்து அவர்களின் மீது வழக்கு தொடருவேன். ஒரு வாரத்திற்குள் அவர்களாகவே மூட்டையக் கட்டவைத்து விடுவேன்” என சீமான் பேசியுள்ளார்.

அந்த வீடியோவுடனான பதிவில் பிரசாந்த் கிஷோர், “போலியான வீடியோக்கள் மூலம் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டுவர்களையும் விட்டுவிடக் கூடாது. ஏன், சீமான் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, வட இந்தியர்களுக்கு எதிரான வீடியோவை பரப்பியதற்காக உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பிரஷாந்த் உம்ராவ் உள்ளிட்ட மூன்று பேர் மீது தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும், தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வதந்திகளைப் பரப்புபவர்கள் தேச துரோகிகள் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். தமிழகம் வந்து நேரில் ஆய்வு செய்த பிஹார் அரசுக் குழுவும் “தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்” என்று உறுதி செய்தது. இந்தப் பின்னணியில் சீமான் குறித்த பிரசாந்த் கிஷோரின் இந்தக் குற்றச்சாட்டு கவனத்தை ஈர்த்துள்ளது.

— Prashant Kishor (@PrashantKishor) March 10, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.