மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இன்று பா.ஜ.க உறுப்பினர் நமிதா முந்தாடா கேள்வி நேரத்தின் போது, பெண்களின் மாதவிடாய் நலம் பற்றிப் பேசினார். `கிராமப்புற மாணவிகளுக்கு 5 ரூபாய்க்கு 8 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட பாக்கெட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இத்திட்டம் கடந்த ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன், `மாணவிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு மானிய விலையில் சானிட்டரி நாப்கின்களை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இத்திட்டம் குறித்து ஒரு மாதத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அமல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
மற்றொரு பா.ஜ.க உறுப்பினர் பாரதி இது குறித்துப் பேசுகையில், “ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக கொடுக்கப்படவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் கட்சியின் வர்ஷா கெய்க்வாட் இது குறித்து பேசுகையில், “பெண்களுக்கு 5 ரூபாயில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் ’அஸ்மிதா’ திட்டத்தை பங்கஜா முண்டே அமைச்சராக இருந்தபோது 2014-19ம் ஆண்டுகளில் அமல்படுத்தினார். ஆனால் அத்திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை. அதனை மீண்டும் சிறப்புடன் அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மகாஜன், `அஸ்மிதா திட்டத்தை சற்று மேம்படுத்தி அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை இத்திட்டத்தால் 29 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். 2022-ம் ஆண்டு முடிந்துபோன இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி மாணவிகளுக்கு ஒரு ரூபாய்க்கும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு குறைந்த விலையிலும் சானிட்டரி நாப்கின் பாக்கெட் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.