கோவை துப்பாக்கிச் சூடு: காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை வாலிபர் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு!

மதுரையைச் சேர்ந்த சத்தி பாண்டி என்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த கோவையைச் சேர்ந்த சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார், சரவணம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்ற போது அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டுள்ளார்.

தற்காப்பு நடவடிக்கை!

அப்போது தற்காப்பு நடவடிக்கையாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், துப்பாக்கியால் சஞ்சய்ராஜாவின் காலில் சுட்டார்.காயமடைந்த சஞ்சய்ராஜா போலீஸாரால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உயிருக்கு ஆபத்து!

அந்த மனுவில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ராஜாவிற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் முனியப்ப ராஜ், கைது செய்யப்பட்டவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளதாகவும் அவர் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை என்பதால் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறினார்.

மேலும், துப்பாக்கியால் சுடப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறி அதற்கான புகைப்படத்தை நீதிமன்றத்தில் காண்பித்தார்.

காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, தாமாக முன்வந்து சரணடைந்த பின்னரும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது எனக்கூறினார்.

இதனையடுத்து, மனு குறித்து காவல்துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.