புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா அமலாக்கத் துறை முன்பு நாளை ஆஜராக உள்ளார்.
டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இது சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக அமைந்ததாகவும் இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அக்கொள்கையை டெல்லி அரசு திரும்ப பெற்றது. எனினும், துணைநிலை ஆளுநர் பரிந்துரையின் பேரில் இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றன.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த பிப்ரவரி 26-ம்தேதி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும் அம்மாநில சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, மார்ச் 9-ம் தேதி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வலியுறுத்தி 10-ம் தேதி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால், 11-ம்தேதி விசாரணைக்கு ஆஜராக விருப்பம் தெரிவித்து அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இவரது கோரிக்கையை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இதன்படி, கவிதா டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் நாளை ஆஜராக உள்ளார். இந்த ஊழலில் சவுத் குரூப் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில், தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளை உள்ளிட்ட பலர் பங்குதாரர்களாக உள்ளனர். இதில் கவிதாவின் பினாமி என கருதப்படும் அருண் ராமச்சந்திர பிள்ளை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவருடைய வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அதன் அடிப்படையில் கவிதாவிடம் விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
விசாரணைக்கு தயார்: இதனிடையே டெல்லி சென்றுள்ள கவிதா செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “இதற்கெல்லாம், நாங்கள் பயப்படமாட்டோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்றார்.
சிசோடியா மீண்டும் கைது: டெல்லி மது கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், திகார் சிறைக்கு நேற்று சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் 2-வது முறையாக அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சிசோடியாவை கைது செய்தனர்.