மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அயோத்தி’.
மொழி, இன, மதங்களைக் கடந்து மனிதநேயத்தைப் போற்றும் திரைப்படம் எனப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்தின் டைட்டில் கார்டில் படத்தின் கதை என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கிரெடிட் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், “அந்தக் கதை என்னுடையது. அதனை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வரிக்கு வரி காப்பியடித்து எழுதிவிட்டார்” என்று எழுத்தாளர் மாதவராஜ் குற்றம்சாட்டியிருந்தார். இது சினிமா மற்றும் எழுத்தாளர் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
எழுத்தாளர் மாதவராஜின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த எஸ்.ராமகிருஷ்ணன், “எனது அயோத்தி திரைப்படக் கதையின் மீது எவர் உரிமை கோரினாலும் அதை நான் உறுதியாக மறுக்கிறேன். நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதையை எழுதினேன். படத்திலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று போடுகிறார்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் திரைத்துறை, எழுத்துலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் அயோத்தி பட இயக்குநர் மந்திரமூர்த்தி மற்றும் படக்குழுவினர் மாதவராஜை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள எழுத்தாளர் மாதவராஜ், “நேற்று ‘அயோத்தி’ படத்தின் இயக்குநர் தரப்பிலிருந்து என்னுடன் நேரில் பேச விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இன்று சென்னையில், சாஸ்திரி பவனில், டெபுடி லேபர் கமிஷனர் முன்பு எனது கிராஜுவிட்டி வழக்கு குறித்த ஹியரிங் இருப்பதால், நான் சென்னைக்கு வர இருப்பதாகத் தெரிவித்தேன்.
இன்று காலை என்னைப் படக்குழுவின் சார்பில் தொடர்பு கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குநர் மந்திரமூர்த்தி, துணை இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோருடன் சந்திப்பு நடந்தது. என்னுடன் வழக்கு சம்பந்தமாக வந்திருந்த – எங்கள் வங்கியில் பணிபுரிந்த – தொழிற்சங்கப் பொறுப்புகளில் இருந்த – தோழர் விஸ்வநாதன் இருந்தார்.
நடந்த விஷயங்களை இரு தரப்பிலும் பகிர்ந்து கொண்டோம். தயாரிப்பாளர் மிகுந்த புரிதலோடு பேசியது சந்திப்பை அர்த்தமுள்ளதாகவும், இணக்கமானதாகவும் ஆக்கியது. இந்தப் படம் முக்கியமான, அவசியமான படம் என்று எனது பாராட்டுகளைத் தெரிவித்தேன்.
இந்தப் படத்திற்காக கடும் உழைப்பைச் செலுத்தியதை, களப்பணி ஆற்றியதை இயக்குநர் மந்திரமூர்த்தி விவரித்தார்.
அவரிடம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கொடுத்த கதை, நான் 2011ல் தீராத பக்கங்களிலும், Bank Workers Unity பத்திரிகையிலும் எழுதிய பதிவிலிருந்து எடுத்து எழுதப்பட்ட கதை என்பது தெரிய வந்தது.
‘அயோத்தி’ படம் OTT தளத்தில் வெளியாகும்போது, நிஜத்தில் பாதிக்கப்பட்ட வட இந்தியக் குடும்பத்திற்கு உதவிய பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், அதன் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ் பாபு ஆகிய இருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
அதற்கான ஏற்பாடுகளைச் செய்து அவர்களுக்கான அங்கீகாரத்தை அளிப்பதாக நம்பிக்கையளிக்கப்பட்டது. தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும், இயக்குநர் மந்திரமூர்த்திக்கும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன்.
இந்த பிரச்னையில் ஆதரவளித்த, துணை நின்ற அத்தனை பேருக்கும் நன்றி. பார்ப்போம். நம்பிக்கைகள் நனவாக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.