தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக கட்சி வளர்ச்சி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் சென்னையை அடுத்து தமிழகத்தின் 3 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. மேலும் 10 மாவட்டங்களில் அலுவலகங்கள் திறப்பதற்காக திட்டமிட்ட நிலையில், இன்று பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கிருஷ்ணகிரியில் உள்ள பாஜக அலுவலக திறப்பு விழாவில் இணை அமைச்சர் முருகன் மற்றும் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
முதலில் அங்கு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் கிருஷ்ணகிரியில் இருந்தபடியே காணொலி மூலம் மேலும் தருமபுரி, திருச்சி, நாமக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்ட அலுவலகங்களை ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து ஜே.பி.நட்டா உரையாற்றியபோது: மாநில கட்சிகள் எல்லாம் தற்போது குடும்ப கட்சிகளாக உள்ளன. காஷ்மீர், பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, தெலங்கானா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. காங்கிரஸின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின. ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது.
தமிழகத்திலும் வாரிசு அரசியல். திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழக முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். இன்னும் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. திமுகவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். ஆகவே தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பத்திரிகையாளர்கள் அவரிடம் அதிமுக உடன் கூட்டணி தொடர்கிறதா? என்ற கேள்வி எழுப்பினர். ஆனால், ஜே.பி.நட்டா அதற்கு பதில் அளிக்காமல் கடந்து சென்றார். இது அதிமுக மீது டெல்லி தலைமை அதிருப்தியில் இருப்பதை போல பார்க்கப்படுகிறது. அதிமுகவை குறித்து ஜே.பி.நட்டா எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்றாலும் கூட்டணி பற்றி பதில் அளிக்காமல் சென்றிருப்பது வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி கேள்வி குறிதான் என்கின்றனர்.